ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு தாம் தயார் என்கிறது முதலாளிமார் சம்மேளனம்

நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை பொறுத்திருக்குமாறு கோரிக்கை

அரசாங்க வத்தமானி அறிவித்தலில் வெளியானதற்கமைய 1,000 ரூபா நாட் சம்பளம் வழங்குவதில் எமக்கு பிரச்சினையில்லை. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகள் தனியார் தேயிலைத் துறையினர் உட்பட பலர் நிவாரணம் கோரி நீதிமன்றம் சென்றுள்ளதால் அது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். நானுஓயா இரதல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று (26) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

2019 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவது தொடர்பிலும் புதிய தொழில்முறை தொடர்பிலும் திட்டமொன்றை சமர்ப்பித்தோம். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது சம்பள நிர்ணய சபைக்குச் சென்றுள்ளமையால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி விட்டோம். இதனால் சட்ட ரீதியாக தொழிலாளர்களுக்கான சலுகைகள் செய்ய முடியாது. ஆனாலும் தொழிலாளர்களும் தோட்ட உத்தியோகஸ்தர்களும் இணைந்து தொழிற்துறையை சில வழிமுறைகளோடு கொண்டு நடத்துவோம்.

1,000 ரூபாய் சம்பளம் உயர்வு என்பது 100 வீத சம்பள உயர்வாகும். மீண்டும் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தை முன்னெடுக்க விரும்பினால் சம்பள நிர்ணய சபையிலிருந்து விலகி வந்தால் அது தொடர்பில் எமக்கு ஆட்சேபனையில்லை. முதலாளிமார் சம்மேளத்தின் அனைவரும் கலந்துரையாடி இது தொடர்பில் முடிவெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Sat, 03/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை