பாப்பரசர் ஈராக்கிற்கு வரலாற்று விஜயம்

பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் பாப்பரசராக நேற்று அந்நாட்டுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னரான பாப்பரசரின் முதலாவது சர்வதேச சுற்றுப்பயணமாகவும் இது உள்ளது. ஈராக்கில் குறைந்து வரும் கிறிஸ்தவ சமூகத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் மதங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும் நோக்கிலுமே பாப்பரசர் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஈராக்கின் உயர் ஷியா மத குருவை சந்திக்கவிருக்கும் பாப்பரசர், மொசூல் நகரில் பிரார்த்தனை மற்றும் அரங்கு ஒன்றில் ஆராதனை நிகழ்விலும் ஈடுபடவுள்ளார்.

ஈராக்கில் அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள சூழலிலேயே பாப்பரசர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பாப்பரசரின் பாதுகாப்பிற்காக சுமார் 10,000 ஈராக் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருப்பதோடு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உரடங்குச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருக்கும் தளம் ஒன்றின் மீது கடந்த புதன்கிழமை ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட பின், பாப்பரசர் விடுத்த அறிவிப்பில் 'ஈராக்கிய கிறிஸ்தவர்களை இரண்டாவது முறையும் கைவிட முடியாது' என்றார்.

1999 ஆம் ஆண்டு அப்பேதைய ஈராக் தலைவராக இருந்த சதாம் ஹுஸைனுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அந்நாட்டுக்கான பயணத்தை ரத்துச் செய்திருந்தார். அந்தப்பயணம் தடைப்பட்டு இரண்டு தசாப்தங்கள் ஆன நிலையில் உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ சமூகங்களில் ஒன்றான ஈராக்கிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனில் இருந்து 250,000 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பின்னர் ஈராக்கில் அதிகரித்த மதத்தை இலக்குவைத்த வன்முறைகள் காரணமாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2014இல் இஸ்லாமிய அரசுக்கு குழு வடக்கு ஈராக்கை கைப்பற்றியதை அடுத்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இடம்பெயர்ந்ததோடு அவர்களின் வரலாற்று முக்கியம்வாய்ந்த தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

Sat, 03/06/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை