ஜெனீவாவில் தீர்வு காண்பதற்காக படையினரை அரசு காட்டிக் கொடுக்காது

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க

ஜெனீவா விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் ஒரு போதும் இராணுவத்தை காட்டிக் கொடுக்காது. அதேநேரம் இலங்கையின் மனித உரிமை தொடர்பாக கருத்துரைக்கும் தார்மீக உரிமை மேற்குலக நாடுகளுக்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு மேற்குலக நாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் எவ்வித மனித உரிமை மீறல் குற்றங்களும் நடைபெறவில்லை.

30 வருட யுத்தம் முடிவுக்குகொண்டு வரப்பட்டதன் பின்னர் 12 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்தது. இது உலகிற்கே சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக கருதப்பட்டது.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை பேரவையின் சுயாதீனத்தன்மை கூட விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையை கடுமையாக விமர்சித்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா பேரவையிலிருந்து வெளியேறியது.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வருவது நகைப்புக்குரியது. ஜெனீவா விவகாரத்தில் தீர்வு காண அரசாங்கம் இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது.

இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும். சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என்பது அவசியம். அதற்காக நாட்டின் இறையான்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 03/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை