நாட்டை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது

மக்களை அச்சமூட்ட எதிரணி முயற்சி − அமைச்சர் ஜீ.எல்

எமது நாட்டை ஒருபோதும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானத்தை ஒரு பிசாசைப் போல நாட்டிற்கு முன்பாக முன்வைத்து மக்களை அச்சமூட்ட எதிரணி முயல்வதாக கூறிய அவர் அச்சப்பட எதுவும் கிடையாது என்றும் கூறினார்.

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு முன்பாக படையினர், அரசியல் தலைவர்களை கொண்டு செல்ல இருப்பதாக கூறுவதில் எந்த உண்மையும் கிடையாது.இது உண்மைக்குப் புறம்பான தகவலாகும். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை எந்த நாட்டையாகிலும் நிறுத்த வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனைகள் உள்னன. சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையில் நாங்கள் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதில் கையெழுத்திட்டிருக்கவில்லை.

ஆகவே நிவ்யோர்க்கில் உள்ள பாதுகாப்புச் சபையின் அனுமதியின் பேரிலேயே குறித்த நாட்டின் படையினர் உள்ளிட்ட பிரிவினர் போர்க்குற்ற நீதிமன்றிற்கு அழைக்கப்பட வேண்டும். அப்படியொரு உத்தரவானது பாதுகாப்புச் சபையிலிருந்து வராது. எமது நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்த சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் குறித்த சபையில் இருப்பதோடு அதிகாரமும் காணப்படுகின்றது. பாதுகாப்புச் சபைக்கு ஏதாவது பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதனை நிராகரிக்க அனுமதிக்க குறித்த உறுப்பு நாடுகளுக்கு உரிமையுள்ளது. ஆகவே எமது நாட்டை ஒருபோதும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது.

ஐ.நா மனித உரிமைப் பேரவை ஒரு பேச்சுவார்த்தை மண்டபம். பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்த, தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முடியும் என்ற போதிலும் அவற்றை அமுல்படுத்தும் அதிகாரம் அந்தப் பேரவைக்கு இல்லை. மாறாக நிவ்யோர்க்கிலுள்ள பாதுகாப்புச் சபைக்கே அந்த அதிகாரம் உள்ளது. எந்த விடயமானாலும் முறைப்படியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்பே குறிப்பிட்ட ஒரு நாட்டின் மீதான கொள்கை குறித்த நடவடிக்கையை எடுக்கமுடியும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட 6ஆம் பிரிவில், இலங்கை மீதான விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பொறிமுறை அமைத்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்படுதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குறித்து அவர்கள் பக்கச்சார்பாக எதிர்பார்க்கின்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான கடமைகள் குறித்த பொறிமுறையில் உள்ளீர்க்கப்படும். இதற்காக 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஐ.நா சபையினால் இந்தப்பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இலங்கையை நெருக்கடிக்குள் தள்ள எவ்வளவு அவசரம் பேரவைக்கு உள்ளது.

எமது நாட்டிற்கெதிரான பிரேரணையை கொண்டு வந்த சில நாடுகள் ஏனைய நாடுகளுக்கு அழுத்தங்களை செய்து நிறைவேற்றிக்கொண்டன. இருந்த போதிலும் 50 வீதப்பொரும்பான்மை அவர்களுக்கு கிட்டவில்லை.

எமது நாட்டை இலக்கு வைத்து ஐ.நா கட்டமைப்பின் சட்டங்களை மீறி கொண்டுவரும் நடவடிக்கைகளை நாம் நிராகரிப்பதுடன், எமது நாட்டிற்கு ஆதரவளித்த நாடுகளுடன் இணைந்து எமது நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

போரின் இறுதிக்கட்டத்தில் 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் மே 19ஆம் திகதிவரை முழுமையான அறிக்கையொன்றை பிரித்தானிய அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார். அவர் கொழும்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்தவர். அவருக்கே போரின் நடவடிக்கை குறித்து முழுமையான அறிக்கையை பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்க அவருக்கு வழங்கப்பட்ட கடமையாதும். என்டன் கேஷ் என்ற குறித்த நபர் இலங்கை குறித்த பொறுப்புடையவர் அல்ல. அவர் பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரிந்தவர்.

குறித்த அறிக்கையில் எந்த குற்றமும் படையினரால் இழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்ஸ்பி சுவாமி அவர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசியபோது, உண்மையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். பிரித்தானிய தகவல் உரிமை சட்டத்தின்படி அவர் மனுவொன்றை முன்வைத்த போது அதனை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 03/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை