நல்லடக்க அனுமதியை அரசு வழங்கும் என எனக்கு தெரியும்

அதனாலேயே பாக். பிரதமரை சந்திக்க செல்லவில்லை

கொரோனாத் தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைக்குமென பெப்ரவரி (10) இல் உறுதியானதாலே,இம்ரான்கானைச் சந்திக்கத் தேவையில்லையென முடிவு செய்ததாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.முப்பது வீதமாக வாழும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை எழுபது வீதமாக வாழும் பௌத்தர்களுடன்தான் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு பேசிய அதாஉல்லா எம்.பி மேலும் தெரிவித்ததாவது:  எல்லாவற்றையும் அரசியலாக்கும் பிற்போக்கு வாதத்தை முற்றாகக் கைவிட வேண்டும்.

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்தக் கோரி,சிலர் கறையான்கள் மழை தேடித் தூது போவது போல் செயற்பட்டனர். சமூகத்தின் பிழைப்புக்கான சவால்களை, சில அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் பிழைப்பாக எடுத்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம்.

வர்த்தமானி அறிவிப்பிலிருந்த பிழையை, பாராளுமன்றத்தில் பகிரங்கமாக சுட்டிக்காட்டி வாபஸ் பெறுமாறு கோரினோம்.இது தொடர்பில் தனிநபர் பிரேரணைக்கும் நாம்தான் தயாரானோம்.இப்போது சாதகமான பதில் கிடைத்துள்ளது. பொதுமக்களை அங்குமிங்கும் அலைக்கழிக்காமல் ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு தடுப்பு பகுதியை உருவாக்க வேண்டும்.நாட்டுக்குள்ளே பேசித் தீர்க்க வேணடிய பிரச்சினைகளை, எங்கோ சென்று பேசித் தீர்க்க முனைவது சாத்தியமற்றது. தமிழர்களின் பிரச்சினைகளை பேசவேண்டிய இடம் ஒஸ்லோவோ அல்லது லண்டனோ அல்ல. இலங்கையிலே இதுபற்றிப் பேச வேண்டும். நாட்டின் முக்கிய பௌத்த மதகுருமார்களை சந்தித்து,எமது தாய்நாடு நாடு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை தௌிவாகக் கூறினோம். நிலக்கீழ் நீரில் வைரஸ் கலக்குமா? இறந்த உடல்களிலிருந்து வைரஸ் வெளியாகுமா? என்பதை ஆராய்ந்து தீர்வு தருமாறுதான் தேசிய காங்கிரஸ் கேட்டது.

வைரஸ் தொடர்பிலான தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் ஒரு அறிக்கையைத் தர, எமது நாட்டின் நிபுணர்கள் வேறுவிதமாக பேசிக் கொண்டிருந்தனர். சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸவிதாரண எனது பக்கத்து ஆசனத்தில் இருப்பவர், அவர் வைரஸ் தொடர்பில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். இது தொடர்பில் அவரிடம் பல கலந்துரையாடல்களை செய்துள்ளேன்.

கிழக்கில், கல்முனை வைத்தியசாலையில் 02 ஜனாஸாக்களும், காத்தான்குடி வைத்தியசாலையில் 02 ஜனாஸாக்களும் அடங்கலாக நாடுமுழுவதிலும் ஜனாஸாக்கள் குளிரூட்டியில் இருக்கின்றன. இவ்விடயம் எனக்கு பலத்த சங்கடத்தை தந்தது. இவ்விடயம் தொடர்பில் எமது மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சட்டத்தரணிகளை அணுகி இவ்விடயத்தை கடுமையாக ஆலோசனை செய்து வருவதாகவும் அதாஉல்லா தெரிவித்தார்.

ராஜகிரிய குறூப் நிருபர்

Tue, 03/02/2021 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை