இந்தியாவில் தஞ்சம்பெற்ற பொலிஸ்: திருப்பி அனுப்பக் கேட்கும் மியன்மார்

உத்தரவுகளை பின்பற்ற மறுத்து அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஒருசில பொலிஸாரை திரும்ப அனுப்பும்படி மியன்மார் கேட்டுள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அண்மைய நாட்களில் எல்லை கடந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது.

மியன்மாருடன் நெருங்கிய உறவை மேம்படுத்த விரும்பும் இந்தியா, ஆட்சிக் கவிழ்ப்புக்கு இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மியன்மாரின் ஜனநாயக நலன்கள் இராணுவ ஆக்கிரமிப்பால் கீழறுக்கப்படக்கூடாது என்று இந்தியாவுக்கான ஐக்கிய நாட்டுத் தூதர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘நட்பு உறவை நிலைநிறுத்தும் வகையில்’ அவர்களை திரும்ப அனுப்பும்படி மியன்மார் நிர்வாகம் எழுதிய கடிதம் ஒன்றில் இந்தியாவை கேட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கடும் பலப்பிரயோகத்தை மேற்கொள்ளும் நிலையில் இதுவரை குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மியன்மார் இராணுவ ஆட்சியில் இருந்து தப்பிப்பதற்கு ஆயிரக்கணக்கானோர் இந்திய எல்லையில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் மியன்மாரின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் எல்லையைத் தாண்டி அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு வந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

Mon, 03/08/2021 - 09:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை