டெங்கு பெருகக்கூடிய பொருட்களை கொண்டுவரும் மாணவர்களுக்கு பரிசு

- கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு

டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்.ஏ.ஆர்.எம்.அஸ்மியின் வழிகாட்டலில் கல்முனை அல் -அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று இடம்பெற்றது.

டெங்கு நுளம்பு பெருகக் கூடிய பொருட்களை அதிகமாகக் கொண்டு வரும் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற வழிகாட்டல்களையும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை (24) பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் டெங்கு பரவும் முறைகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு இடம்பெற்றதுடன், கொண்டுவரப்பட்ட பொருட்கள் யாவும் கல்முனை மாநகர சபை திண்ம கழிவு அகற்றல் பிரிவு மூலம் அகற்றப்பட்டது.

இந் நிகழ்வில் ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டதுடன், கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச்.அலி அக்பருக்கும் அங்கு கடமை புரியும் ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர் .

மாணவர் மத்தியில் வித்தியாசமான முறையில் இவ் விழிப்புணர்வு செயல்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை தினகரன், பெரியநீலாவணை விசேட நிருபர்கள்

Sat, 03/27/2021 - 15:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை