இந்தியா அஸ்ட்ராசெனகா ஏற்றுமதி இடைநிறுத்தம்; இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியா அஸ்ட்ராசெனகா ஏற்றுமதி இடைநிறுத்தம்; இலங்கைக்கு பாதிப்பில்லை-India Temporarily Holds COVID19 AstraZeneca Vaccine

- இந்தியாவின் தடுப்பூசிக்கான கேள்வி; தொற்றின் அதிகரிப்பே காரணம்
- இந்தியாவில் இரட்டை திரிபு கொரோனா வைரஸும் கண்டுபிடிப்பு

இந்திய தான் உற்பத்தி செய்யும் கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசிகளின் ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கேள்வியை ஈடுசெய்யும் வகையிலும், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் அதிகரிப்பினையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரை, கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொவிஷீல்ட் (Covishield) கொவேக்ஸ் (Covax) ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இலங்கையில் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியே விநியோகிக்கப்பட்டு வருகின்றது,

உலகின் மிகப்பெரும் மருந்து உற்பத்தியாளரான, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா (Serum Institute of India) நிறுவனத்தால் ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ராசெனகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, இலங்கை உள்ளிட்ட 180 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தற்போது அத்தடுப்பூசிகளின் அனைத்து முக்கிய ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

ஆயினும் இவ்வாறு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ளதால் இலங்கைக்கு பாதிப்பில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இத்தற்காலிக தடைக்கு மத்தியில் இந்தியாவிடமிருந்து தடுப்பூசியை பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என, ஒளடத உற்பத்திகள்‌, வழங்குகைள்‌ மற்றும்‌ ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஏற்கனவே வழங்கியுள்ள கொள்வனவு கோரிக்கை தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கையிருப்பில் உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மற்றும் ஏற்கனவே இந்தியாவிடம் 5 இலட்சம் டோஸ் அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ளதனால் நாட்டில் ஏற்கனவே முதலாவது டோஸை பெற்றவர்களுக்கு 2ஆவது டோஸை வழங்குவது உள்ளிட்ட கொவிட் தடுப்பூசியை வழங்குவதில் சிக்கல் இல்லை என, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்யாவிலிருந்து 70 இலட்சம் 'ஸ்புட்னிக் 05' தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை நேற்றுமுன்தினம் (24) அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து வருவதோடு, அங்கு கொவிட்-19 தொற்று நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இல்லாத நிலையில், தடுப்பூசியை தயாரிக்கும் 2 நிறுவனங்களையும் உற்பத்தியை அதிகரிக்கும்படி மத்திய அரசு கேட்டு உள்ளது.

இதேவேளை, இந்தியாவில் புதிய இரட்டை உருமாறிய திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளமையானது அங்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில மாநிலங்களில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்புக்கு இவைதான் காரணம் என்பதை நிரூபிக்கக் கூடிய அளவிலான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு இல்லை என்பதே இந்திய அரசின் விளக்கமாக அமைந்துள்ளது.

பிரிட்டன், ஆபிரிக்க நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸின் புதிய இரட்டை பிறழ் திரிபு இந்தியாவில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பரவலாக சேகரிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேகரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 787 மாதிரிகளில், பிரிட்டனில் பரவிய வைரஸ் பிறழ்வு 736 மாதிரிகளுடன் ஒத்துப்போவதோடு, 34 வைரஸ் திரிபு, தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுடனும், ஒரு திரிபு பிரேஸிலில் உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒத்துப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 03/25/2021 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை