சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடி பேச்சு நடத்தும்

கம்பனிகளின் நிபந்தனை குறித்து விசேடமாக ஆராய்வு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணய சபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டுமென சம்பள நிர்ணய சபையில் கடந்த 8ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அன்றைய தினம் சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதாயின் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என கம்பனிகள் சம்பள நிர்ணய சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சம்பள நிர்ணய சபையின் உறுப்பினரும் விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அதேநேரம், நாளொன்றுக்கு 16 கிலோவிற்கும் குறைவாக கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு முழு நாளுக்கான சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும் குறித்த கடித்தில் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இன்றைய தினமும் கம்பனிகள் சம்பள நிர்ணயசபையை புறக்கணித்தால் அல்லது தமது தீர்மானத்தில் விடாப்பிடியாகவே இருக்குமானால் தொழில் அமைச்சரே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் ஆர்.எம். கிருஷ்ணசாமி மேலும் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 03/01/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை