தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என தினேஷ் கோரிக்கை

உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்வுக்கு ஏற்பாடு

ஜெனீவா பிரேரணையை இலங்கை நிராகரித்தாலும் அரசியல் அமைப்புக்கேற்ப செயற்படும் விதமாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அரசு உருவாக்கியுள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் நடைபெற்று முடிந்துள்ள விடயங்கள் தொடர்பில் (இன்று) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றிய போது, ஜெனீவாவில் எமது நாடு தோல்வியை சந்தித்துள்ளது. நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தோல்வி ஒன்றை இலங்கை சந்திக்கவில்லை. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பேதேனும் விடுக்கவுள்ளாரா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலத்தில் இணை அனுசரணைக்கு கையொப்பமிட்டு வெளிநாட்டு சக்திகளிடம் எமது நாடு கட்டுப்பட்டிருந்தது, இதிலிருந்து வெளியேற மக்கள் ஆணையொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசியல் அமைப்பை மீறி நடவடிக்கை எடுக்க நேர்ந்துள்ளதாக தற்போதைய எதிர்க்கட்சியின் ஆட்சியில் இருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவே தெரிவித்திருந்தார். தற்போது ஜெனீவா பிரேரணையை இலங்கை நிராகரித்தாலும் அரசியலமைப்பிற்கமைய செயற்படும் விதமாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை நாம் உருவாக்கியுள்ளோம்.

எதிர்கட்சியினர் குழப்பமடைய வேண்டியதில்லை. தாய் நாட்டுக்கு எதிராக அவர்கள் செயற்பட வேண்டாம். ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் நடைபெற்று முடிந்துள்ள விடயங்கள் தொடர்பில் நாளை (இன்று) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுப்பேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை