குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை

வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

25 நாடுகள் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டில்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக அதன் அங்கத்துவ நாடுகள் செயற்பட முடியாது என்பதை சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், அந்த கொள்கைக்கு முரணான வகையிலேயே ஒருங்கிணைந்த நாடுகள் செயற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட `பிரேரணை நேற்றைய தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து நேற்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன;

47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அந்தவகையில் 11 நாடுகள் பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்துள்ளன.

அத்துடன் மேற்படி வாக்களிப்பில் 14 நாடுகள் கலந்து கொள்ளாத நிலையில் 25 நாடுகள் மேற்படி பிரேரணை தொடரபில் எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளன. அந்த வகையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைத்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இலங்கையில் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு, உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் மூலம் நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படுகின்றது.

நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைத்து இன,மத மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை அடிப்படையற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக அதன் அங்கத்துவ நாடுகள் செயற்பட முடியாது என்ற நிலையில் அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறி அந்த நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்துள்ளன. அந்த வகையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 03/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை