பெண்களுக்கு எதிரான சமூக ஊடகங்கள் மூலமான வன்முறைகளுக்கு நடவடிக்கை

சமூக ஊடகங்களின் வாயிலாக பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

சமகாலத்தில் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வடிவங்களின் ஊடாக பெண்களின் விம்பங்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெண்களுக்கு எதிராக இவ்வாறு பாரதூரமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு தாய்மார்களும் மனைவிமார்களும் இருக்கவில்லையா என்பதே எனக்குள் உள்ள கேள்வியாகும்.

சமூகத்தில் பல்வேறு வகையில் பெண்கள் துன்புறுத்தல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் உள்ளாகுவதை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஏற்றுக்கொள்வதுடன், அந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

உரிய துறையினருக்கு ஜனாதிபதி இதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்து வருகிறார் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 03/09/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை