அமெரிக்காவில் முப்படையினரை விமர்சித்தால் சிறைத்தண்டனை

எமது முப்படையை வேட்டையாட சிலர் நினைப்பது அநீதி

அமெரிக்காவின் முப்படையினருக்கு எதிராக சர்வதேசரீதியில் விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவது அந்நாட்டின் சட்டப்படி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கம்,அமெரிக்க நீதிமன்றம் மற்றும் அமெரிக்க பிரஜைகள் அமெரிக்காவின் முப்படையினருடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டால் அது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்றவாறு அமெரிக்கா சட்டத்தை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சர்வதேச நடவடிக்கை சட்டம் மற்றும் தேசப்பற்று சட்டம் என 2 முக்கிய சட்டங்களை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய  நாடுகள் சபையில் அமெரிக்காவின் சார்பில் உரையாற்றிய தூதுவர் ஜோன் போல்டன்,

சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் எந்த ஒரு அதிகாரியும் அமெரிக்காவின் முப்படையினரை விமர்சிக்க முன் வருவார்களானால் அவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனிலும் அதே நடைமுறையே உள்ளது. அது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பலமான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க முப்படைகளில் பாதுகாக்க அந்த நாடுகள் பலமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

எமது நாட்டைப் பொருத்தவரை முப்பது வருட யுத்தத்தை நிறைவு செய்து நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த முப்படையினரை வேட்டையாட நினைப்பது பெரும் அநீதியான நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமை ஆணையாளர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதுடன் அரசாங்கம் என்ற வகையில் அதற்கு தேவையான நடவடிக்கைகள் அவதானமாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையானது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பில் தொடர்ந்து ஏழு தசாப்தங்களாக அங்கத்துவம் வகித்து வருகிறது. தொடர்ந்தும் நாம் அதன் அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்கவே செயற்பட்டு வந்துள்ளோம். தொடர்ந்தும் நாம் குறித்த நாடுகளுடன் சுமுகமான நட்புறவைப் பேணி செயற்படுவோம். எனினும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றன.

மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை நாம் ஆரம்பத்திலிருந்தே ஒருதலை பட்சமானது என நிராகரித்து வருகின்றோம். எத்தகைய ஆய்வுகளும் இன்றி தன்னிச்சையான அடிப்படையற்ற விடயங்களே அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கூட அதனை ஏற்றுக்கொண்டு குறித்த அறிக்கையில் திருத்தங்கள் செய்வது பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளது. அது எமக்கு நீதியைப் பெற்றுத் தரும் அறிக்கையல்ல. மாறாக

அந்த அறிக்கையின் அடிப்படையே தவறானது.

அது தொடர்பான வாக்கெடுப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது. ஜெனீவா நகரில் கடந்த வாரம் இலங்கை தொடர்பான விவாதங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கை யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்புபட்டதல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

2019 நவம்பர் மாதத்தில் மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கை எமது நாட்டின் உள் விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் நலன்கள் அந்த நாட்டு அரசாங்கங்களின் அரசியல் இருப்பு என்பவற்றையே அது சார்ந்துள்ளது. அவை எந்த வகையிலும் இலங்கையின் நலன் சார்ந்த விடயங்களுடன் சம்பந்தப்பட்டதல்ல. எமது நாட்டை அரசியல் கால் பந்தாக உபயோகித்தே மேற்படி வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்த குற்றம் தொடர்பில் இப்போது பேசுகின்றனர். குற்றம் புரிந்தவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் இப்போது இந்த நாட்டில் இல்லை.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/02/2021 - 06:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை