பங்களாதேஷில் பிரதமர் மஹிந்தவுக்கு மகத்தான செங்கம்பள வரவேற்பு

பிரதமர் ஹசீனா விமான நிலையம் வந்து வரவேற்றார்

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமாக நேற்று(19) முற்பகல் பங்களாதேஷ் பயணித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனாவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பும் பிரதமரை வரவேற்கும் முகமாக நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷெய்க் ஹசீனா , வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பங்களாதேஷ் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தியதுடன், இலங்கை பிரதமரினால் இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு பிரதமருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானார்.

பிரதமர் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் யூஎல் 189 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பங்களாதேஷ் சென்றடைந்தனர்.

இந்த இரண்டு உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் 'தேசத்தின் தந்தை'யாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார். பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட 'முஜிப் ஆண்டு' தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் சிறப்புரையாற்றினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முஹமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Sat, 03/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை