அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை பல ஐரோப்பிய நாடுகளும் இடைநிறுத்திய நிலையில் உலக சுகாதார அமைப்பின் தடுப்பு மருந்து பாதுகாப்பு நிபுணர்கள் அது பற்றி மீளாய்வு செய்ய நேற்று கூடினர்.

இந்த தடுப்பூசியை பெற்றவர்களிடம் இரத்தம் உறையும் சம்பவங்கள் ஐரோப்பாவில் பதிவான நிலையிலேயே இதன் பாதுகாப்புப் பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

எனினும் இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே எதிர்பார்க்கப்படுவதை விடவும் குறைவான அளவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரிட்டன் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் குறிப்பிட்டுள்ளன.

இது பற்றி பேசுவதற்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் நேற்றுக் கூடியது. அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து பற்றி தமது முடிவை அந்த நிறுவனம் வரும் வியாழக்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனில் சுமார் 17 மில்லியன் பேர் தடுப்பு மருந்தை பெற்ற நிலையில் 40 க்கும் குறையான இரத்தம் உறைவுச் சம்பவங்களே பதிவாகி இருப்பதாக அஸ்ட்ராசெக்கா நிறுவனம் கடந்த வாரம் கூறி இருந்தது.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை இடை நிறுத்தியுள்ளன. இந்த வரிசையில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் புதிதாக இணைந்தன.

எனினும் பெல்ஜியம், போலந்து, செக் குடியரது மற்றும் உக்ரைன் அஸ்ட்ராசெனக்காவை பயன்படுத்துவதை தொடரப்போவதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இரத்தம் உறைவு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும், ஐரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளது.

தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் அஸ்ட்ராசெனக்கா மிக மலிவானது. ஓர் ஊசியின் விலை 3 டொலர். ஏழை நாடுகளுக்கான கொவக்ஸ் திட்டத்துக்காக அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியே பெருமளவு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் அஸ்ட்ராசெனக்கா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், தெளிவான அரசியல் சான்றுகளின் அடிப்படையில் தங்களது மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள அஸ்ட்ராசெனக்கா, அதனைக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 17 மில்லியன் மக்களின் தரவுகளை கவனமாக பரிசீலித்து வருவதாகவும், அவர்களின் வயது, பாலினம், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேருக்கு நரம்பில் இரத்தம் உறைதல் காணப்பட்டதாகவும், 22 பேருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எதிர்பார்த்த நிகழ்வை விட இது மிகவும் குறைவு என்றும் கூறியுள்ளது. மேலும் ஏனைய தடுப்பூசிகளிலும் இதுபோன்ற சிக்கல் காணப்படுவதாகவும் அஸ்ட்ராசெனக்கா கூறியுள்ளது.

Wed, 03/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை