இலங்கை தேசியக் கொடியுடன் நீச்சல் உடைகள் தயாரிப்பு

- நீக்குமாறு அமேசானிடம் இலங்கை கோரல்  

இலங்கை தேசியக் கொடி உருவம் பொறிக்கப்பட்ட நீச்சலுடைகள், உள்ளாடைகள் மற்றும் கால்துடைப்பான்களை அமேசான் இணையத்தளத்திலிருந்து நீக்குமாறு இலங்கை கோரியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட கால்துடைப்பான், பாதணிகள் போன்ற பொருட்களில் இலங்கையின் தேசியக்கொடி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, சீனாவில் தயாரிக்கப்பட்ட நீச்சலுடைகள், உள்ளாடைகளிலும் இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகளும் அமேசான் இணையத்தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையின் தேசிய கொடி உருவம் பொறிக்கப்பட்ட இத்தகைய பொருட்கள் தொடர்பில் அமேசான் நிறுவனத்திடம் இலங்கை தனது ஆட்சேபனையை தெரிவித்ததுடன், இத்தகைய பொருட்கள் எதிர்காலத்தில் தயாரிக்காதிருக்க உறுதியளிக்குமாறு சீன அதிகாரிகளிடம் இலங்கை கோரியுள்ளது. சீனாவிலுள்ள இலங்கைத் தூதுரகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை தேசியக் கொடியை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட கால்துடைப்பான்கள் அல்லது அது போன்ற பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அமேசான் நிறுவனத்திடம் இலங்கைத் தூதரகம் கடிதம் மூலம் கோரியுள்ளது’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள இலங்கைத் தூதரகமும் இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.  எனினும் ,அமேசான் இணையத்தளத்தில் சீன வர்த்தகர்கள் சிலரால் இலங்கைக் கொடி உருவம் பொறிக்கப்பட்ட நீச்சலுடை, உள்ளாடை போன்றவை விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த ஆடைகளுக்கு 9.20 டொலர் முதல் 17.30 டொலர்கள் வரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Tue, 03/16/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை