தடுப்பூசி வழங்கலில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது

முறைப்பாடு கிடைத்தால் உரிய நடவடிக்ைக

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது. அவ்வாறு தலையீடு தொடர்பில் முறைப்பாடு கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்குகையில் கொழும்பு மாவடத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றஞ்சாட்டு தொடர்பாக வினவப்பட்டது.இதற்கு பதிலளித்த அமைச்சர்,

கொரோனா தடுப்பூசி வழங்குகையில் எந்த வித அரசியல் தலையீடும் இடம்பெறாதவாறு செயற்படுமாறு ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரும் சுகாதார தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ள கொழும்பு, கம்பஹ மாவட்டங்களில் தடுப்பூசி வழங்குவது பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.எவருக்கும் இதில் அரசியல் தலையீடு செய்ய முடியாது.யாராவது தலையீடு செய்ய முற்பட்டால் அதற்கு தலைசாய்க்க வேண்டாம் என்று கோருகிறோம்.சுயாதீனமாக செயற்படுமாறும் நீங்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளீர்கள் என்றும் சுகாதார தரப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.தலையீடு தொடர்பில் முறைப்பாடு இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது நாட்டுக்கு தடுப்பூசி கிடைத்து வருகிறது. 110 நாடுகளுக்கு இது வரை ஒரு தடுப்பூசி கூட கிடைக்கவில்லை.எமது நாட்டுக்கு 1.16 மில்லியன் தடுப்பூசி கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் கொள்வனவு செய்ய இருக்கிறோம்.இதில் சிறு தாமதம் உள்ளது. தீவிபத்தினால் இந்தியாவில் இருந்து கிடைக்கும் தடுப்பூசி தாமதமானது.

ஷம்ஸ் பாஹிம் 

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை