மத்திய ஐரோப்பாவில் புதிய கொரோனா அலை தீவிரம்

கொரோனா தொற்றின் புதிய அலை தாக்கத்திற்கு முகம்கொடுத்திருக்கும் செக் குடியரசு மற்றும் பல மத்திய ஐரோப்பிய நாடுகளில் அவசர சிகிச்சை பிரிவு நோயாளர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளை கையாள முடியாத நிலையில் செக் குடியரசு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக போலந்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

நோய் உச்சத்தை தொட்டிருக்கு ஹங்கேரியில் முன்னர் கடந்த டிசம்பர் உச்சம் பெற்றதை விடவும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பெரும்பாலான கடைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

போலந்திலும் நோய்த் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த நவம்பர் பிற்பகுதிக்கு பின்னர் கடந்த புதன்கிழமை தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு 17,260 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

போலந்தில் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்ட நிலையில் இரண்டு பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. செக் குடியரசில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 8,618 ஆக அதிகரித்திருந்தது. இவர்களில் 1,853 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் தொற்றினால் கடந்த செவ்வாய்கிழமை செக் குடியரசின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் வீ தடுப்பூசிக்கான ஒப்புதலை வழங்குவதை விரைவுபடுத்தும்படி சுலோவாக்கியா ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்டுள்ளது. சுலோவாக்கியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் மந்தமாக செயற்படுவது குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அஸ்ட்ராசெனக்கா மருந்து நிறுவனம் தமது தடுப்பு மருந்தை உறுப்பு நாடுகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது குறித்தே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Fri, 03/12/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை