உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்துவோம்

ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலமே சுபீட்சத்தின் நோக்கை அடையலாம், அதற்கு விவசாய ஏற்றுமதி இன்றியமையாதது என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டின் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து வெளிநாட்டு சந்தைவாய்ப்பினை பெற்று ஏற்றுமதி பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவோம் என தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைதிட்டத்திற்கு ஏற்ப நாடுபூராகவும் விவசாய ஏற்றுமதி வலயங்களை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குனுகொலபெலஸ்ஸ கசாகல ரஜ மகாவிகாரையில் சனிக்கிழமை (27) ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

2019 ஆம் ஆண்டு 6300 கோடி ரூபாவாக இருந்த விவசாய ஏற்றுமதி வருமானம் ஒருவருடகாலத்தினுள் 7000 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. அன்று எமது புதிய அரசாங்கம் பதவியேற்று அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவியேற்கையில் அவர்களது அமைச்சுக்களை வாசித்த போது சிலர் சிரித்தார்கள். சிறிது காலம் செல்லும் வரை பிரதிஅமைச்சர் தயாசிரி ஜயசேகரவை பத்திக் அமைச்சர் என்றும் பிரசன்ன ரணவீர பிரதிஅமைச்சரை களிமண் அமைச்சர் என்றே அழைத்தனர். ஒருசிலர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க தயக்கம் காட்டினர். எமது உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு அனைவரினது கவனத்தினை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு பெயரிட்டோம்.

2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை அறிமுகப்படுத்தும் போதும் அதிகமானோர் இந்த பெயரிற்காகவும் சிரித்தார்கள். இருந்தாலும் நாம் இதனூடாக யுத்தத்தினை நிறைவுசெய்து நாட்டை கட்டியெழுப்பினோம். எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து வெளிநாட்டு சந்தைவாய்ப்பினை பெற்று ஏற்றுமதி பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவோம். உள்நாட்டு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக பாடுபட்ட அனைத்து அரசாங்கங்களும் கடந்த காலங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும்.

வெளிநாட்டவர்களினால் எமக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை ஆகியவற்றை மாத்திரம் நம்பியிருந்தார்கள். அண்மைகாலம் வரை நிலக் கடலை, மா,கொய்யா மற்றும் புளியை மாத்திரமன்றி ஈர்க்குகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இதனூடாக பாரியதொருதொகை வெளிநாட்டு செலாவணி எமது நாட்டிற்கு இல்லாமல் ஆக்கப்பட்டது. நாம் உற்பத்திகளை செய்யாவிட்டால் தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுக்கமுடியாமல் போகும். நாம் இவற்றை பயிரிட ஊக்குவிப்பதினூடாக வெளிநாட்டு செலாவணி மீதமாக்கப்பட்டு விவசாயிகள் வருமானம் பெற்றுவருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை பிரதமர் மரக்கன்றொன்றினை நட்டு ஆரம்பித்துவைத்ததோடு இஹல அலுத்வௌகுளத்திற்கு பிரதமரினால் மீன் குஞ்சுகளும் இடப்பட்டன. இங்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசவாசிகளுக்கு பிரதமரினால் மா, மரமுந்திரிகை மற்றும் மிளகு ஆகிய மரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஸ, மஹிந்தஅமரவீர, டொக்டர் ரமேஸ் பதிரன மற்றும் நாமல் ராஜபக்‌ஷ பிரதி அமைச்சர்களான ஜானக வக்கும்புர, டி.வீ.சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்ஸ, உபுல் கலப்பத்தி, தென் மாகாண ஆளுநர் விலீகமகே ஆகியோருடன் பெரும் திரளானோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Tue, 03/02/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை