உல்லாசப் பயணிகளால் மாசடைந்துவரும் தூவிலி எல்ல நீர்வீழ்ச்சி

உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் மனம்கவர் இடமாக புகழ் பெற்றுள்ள பலாங்கொடை கல்தோட்டை , தூவிலிஎல்ல நீர்வீச்சி மற்றும் அதனை அண்மித்த இயற்கை வனப்பிரதேசங்கள் பொறுப்பற்ற விதத்தில் மாசடைந்து வருவதாக பிரதேச மக்களும் சுற்றாடலியலாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர். உள்நாட்டு உல்லாச பயணிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இப்பிரதேசம் மாசடைந்து வருவதால் இயற்கை வளம் அழிவுற்று வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மிகுந்த வளமும் அழகும் நிறைந்த இந்த நீர்வீழ்ச்சியும் சுற்றுப்புறமும் இங்கு வருகைதரும் உள்நாட்டு  உல்லாசப்பயணிகளினால் மாசடைந்து வருகின்றது.  போதைவஸ்த்துகள், மதுபான போத்தல்கள்  உணவு மற்றும் ஏனைய பொருட்களின் எச்சங்களையும் பிளாஸ்டிக் பொலித்தீன்களையும் இங்கு  வீசிவிட்டுச்செல்வதனால் இப்பகுதி அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேசம் பலாங்கொடை பிரதேசசபையால் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன் இங்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கு இளைப்பாற்று மண்டபம், மலசல கூட குடிநீர் வசதிகளை வழங்கியுள்ள போதிலும் பாரதூரமான பாதிப்புக்களை இல்லாமல் செய்யக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது குறித்து பிரதேச மக்களும் சுற்றாடலியலாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன்  இப்பகுதியில் மது அருந்திவிட்டு போதையில் குளிக்கச் சென்று  பள்ளத்தாக்குகளில் விழுந்து மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் )

Wed, 03/31/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை