பாவனைக்குதவாத எண்ணெய் இறக்குமதி குற்றம் நிரூபிக்கப்பட்டதும்

தராதரம் பாராது தண்டனை

சபையில் பந்துல குணவர்தன

 

மனித பாவனைக்குதவாத எண்ணெய் இறக்குமதி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷமூட்டப்பட்ட எண்ணெய்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்பாடுகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறான எபலடொக்ஸின் அடங்கிய எண்ணெய் இறக்குமதி தொடர்பிலான தகவல்கள் வெளியாகிய மறுதினமே அதுதொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதானிக்கு உத்தரவிட்டிருந்தேன்.

சுத்தம் செய்யும் எண்ணெய் மற்றும் பிரித்தெடுக்கும் எண்ணெய் இறக்குமதியானது எமது நாட்டில் நீண்டகாலமாக இடம்பெறுகிறது. நாம் பின்பற்றும் வழமையான செயற்பாடுதான் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதும் அதன் தரம் தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்துவது. முதல்கட்டமாக எண்ணெய்யை இறக்குமதி செய்பவர்களின் குதம்களுக்கு அனுப்புவோம்.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் உணவு தொடர்பிலான பிரிவும் இந்த எண்ணெய் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தியதால் மனித பாவனைக்கு உதவாத எண்ணெய் 13 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறும் சுகாதார அமைச்சின் உணவு தொடர்பான பிரிவும் உத்தரவிட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் இந்த எண்ணெய்யை விடுவிக்காது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த எண்ணெய் வைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலைக்கு நுவர்வோர் அதிகார சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சியசாலையிலிருந்து எண்ணெய்யை வெளியில் கொண்டுவர முடியாது.

இந்த எண்ணெய் மக்கள் பாவனைக்கு உகந்ததா? என ஆராய்வதற்காக மீண்டும் நுகர்வோர் அதிகாரசபையால் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படாத வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

சீனி இறக்குமதி செய்துள்ள நிறுவனங்கள் எவையும் எண்ணெய் இறக்குமதியுடன் தொடர்புப்படவில்லை. வேறு மூன்று நிறுவனங்கள்தான் இவற்றை இறக்குமதி செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளனர். நாமும் அதனைத்தான் கூறுகிறோம். உரிய தரப்பினரும் பொலிஸாரும் இந்த விடயம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு கோருகிறேன்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை