இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்கிறார் அங்கஜன்

மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

கொரோனா தொற்று சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமல்ல என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி பிரதேசத்தில் (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; இரணைதீவு மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது தான் படிப்படியாக வாழ்வாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். அண்மையில் இரணைதீவில் கடலட்டை உற்பத்திக் கிராமம் ஒன்றும் கடற்தொழில் அமைச்சர் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.

அம் மக்கள் மீளவும் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சிக்கும் வேளையில் இவ்வாறு சடலங்கள் அடக்கம் என்பது அந்த பகுதிக்கு பொருத்தமற்றது.

எனவே இது சம்பந்தமாக நிச்சயமாக அரசாங்கத்திற்கு எங்கள் கருத்துக்களைத் தெரிவித்து மறுபரிசீலனை செய்யக் கோர தயாராக உள்ளோமென மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

Fri, 03/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை