புர்கா தடை தொடர்பில் அமைச்சரவை பத்திரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை

புர்கா தடை தொடர்பில் அமைச்சரவை பத்திரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை-Burka Ban Cabinet Paper Not Submitted in Cabinet Meeting-Keheliya Rambukwella

- புர்கா தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது
- நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள்

புர்காவை தடை செய்வது தொடர்பிலான எந்தவொரு அமைச்சரவை பத்திரமும் நேற்று (15) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர், வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆயினும், புர்கா தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கடந்த 10 - 15 வருடங்களில் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக முஸ்லிம்களுடன் இருந்து வந்த உறவை இலங்கையர்கள் எனும் வகையில் அங்கீகரித்தல், இன நல்லிணக்கம், உள்ளிட்ட விடயங்களில் எந்தவொரு பிரச்சினையும் காணப்படவில்லை. ஆயினும் அண்மைக் காலமாக புர்கா உள்ளிட்ட ஒரு சில விடயங்களில் மாற்றங்கள்  இடம்பெற ஆரம்பித்தன.

அந்த வகையில் இது எமக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியில் பிரான்ஸ் உள்ளிட்ட, பெரும்பாலான நாடுகள் தமது தேசிய பாதுகாப்புக்கு ஏதேவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தைக் கொண்டுள்ளன.

அதற்கமைய, இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கால நேரத்தை ஒதுக்கி, அவசரப்படாமல் அதனை மேற்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக, அமைச்சர் (சரத் வீரசேகர) தனது கருத்தை முன்வைத்தாகவும், அது தொடர்பில் காலத்துடன் திறந்த கலந்துரையாடலுடன் செயற்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புர்கா மற்றும் முறையற்ற வகையில் காணப்படும் மத்ரஸாக்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கடந்த சனிக்கிழமை (13) கையெழுத்திட்டதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

அத்துடன், சுகாதார பாதுகாப்பு முகக் கவசங்களைத் தவிர்ந்த, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏனைய முகம் மூடும் விடயங்களை தடை விதிக்கும் புதிய சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக, அமைச்சர் சரத் வீரசேக அண்மையில் தெரிவித்திருந்தார்.

நேற்றைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 9 தீர்மானங்கள்
1. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கல்வி அமைச்சு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரு நாடுகளுக்கும் இடையில் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கும், கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கும் இயலுமான வகையில் உயர் கல்வித் துறையில் கல்வி மற்றும் விஞ்ஞானபூர்வமான அறிவுப் பரிமாற்றங்களுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களை ஐந்து வருட காலப்பகுதிக்கு (05) நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கல்வி அமைச்சு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் 800 முழுமையான புலமைப் பரிசில்களும், ஆரம்ப பட்டப்படிப்புக்கான கட்டணம் விடுவிக்கப்பட்ட 200 பகுதியளவிலான புலமைப்பரிசில்களும் உள்ளடங்கலாக 1000 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆராய்ச்சிகள், மாநாடுகள் மற்றும் வேறு கற்கை நடவடிக்கைகளுக்காக இலங்கைஃபாகிஸ்தான பல்கலைக்கழகங்களில் 50 பீட அங்கத்தவர்களை இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலையான காலப்பகுதிக்குப் பரிமாற்றிக் கொள்வதற்கும், இவ் ஒப்பந்தத்தின் கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. கொவிட் 19 தொற்று நிலைமையில் கல்வித்துறையின் கற்றல் - கற்பித்தல் செயன்முறையை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்காக தொலைக்காட்சி சேவைகளின் ஒத்துழைப்பைப் பெறல்
தொற்று நிலைமையால் 2020 மார்ச் மாதத்தில் பாடசாலைகளை மூடுவதற்கு நேரிட்ட போது, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 'ஐ அலைவரிசை' மற்றும் 'நேத்ரா அலைவரிசை' இணைத்து தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட 'குருகுலம்' நிகழ்ச்சித்திட்டம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பிப்பதற்குத் தாமதமாகையால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக 'குருகுலம்' நிகழ்ச்சித்திட்டத்தின் 2 ஆம் படிமுறையின் கீழ் 3 ஆம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரை சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான கல்வி நிகழ்ச்சிகள் 'ஐ அலைவரிசை' மற்றும் 'நேத்ரா அலைவரிசைகளை' ஒருங்கிணைத்து 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 'குருகுலம்' கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. சாலிகா விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்கு தொகுதி அமைந்துள்ள 'அன்டர்ஷன் கோல்ஸ் லிங்க்ஸ்' எனும் பெயரிலுள்ள காணியை விடுவிப்பு வழங்கல் பத்திரம் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு மாற்றிப் பெறல்
3.4125 ஹெக்ரயார் பரப்பளவு கொண்ட சாலிகா விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்கு தொகுதி அமைந்துள்ள 'அன்டர்ஷன் கோல்ஸ் லிங்க்ஸ்' எனும் பெயரிலுள்ள காணி, 1966 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பொறுப்பின் கீழ் காணப்படுகின்றது. குறித்த காணி வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் மேம்படுத்தாத பெறுமதியை அரசாங்கத்திற்கு அறவிடுவதன் அடிப்படையில் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வழங்கலாக, அளிப்புப் பத்திரத்தின் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒப்படைப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்களும் காணி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் தெரிவு செய்யப்ட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீடும் வியாபார நிலையமும் (Homeshop) அமைக்கும் வேலைத்திட்டம்
உணவு விநியோக வலையமைப்பை விரிவாக்குவதற்காக சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் தெரிவு செய்யப்ட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் 25,000 பேரை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீடும் வியாபார நிலையமும் (Homeshop) அமைக்கும் வேலைத்திட்டத்தை ஏனைய நிரல் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களையும் இணைத்து மேற்கொள்வதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கு தேசிய ரீதியான வழிகாட்டல் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான செயலணி மூலமும், வேலைத்திட்ட நடவடிக்கைகள் சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மறறும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இந்நிகழ்ச்சித்திட்டம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. 100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுடன் இணைந்து முன்மொழியப்பட்டுள்ள வீடும் வியாபார நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன், குறித்த வீடும் வியாபார நிலையமும் தேவைக்கேற்ப 200,300,400 மற்றும் 500 சதுர அடிகளில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்ச்ச்pத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு (SLA) பொதிகள் போக்குவரத்து விமானமொன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளல்
ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியிடம் அதிகமான பொருளாதார சிக்கன விமானங்கள் காணப்படுகின்றது. அதனால் விமானப் பயணப் பாதை வலையமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அண்மைய வருடங்களில் அதிக இலாபகர வியாபாரங்களில் பயணிகள் விமானப் போக்குவரத்து வலையமைப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக பொதிகள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொருத்தமான விமானங்கள் இல்லாததால் விமானப் பொதிகள் போக்குவரத்தால் நன்மைகள் கிட்டவில்லை. கொவிட் 19 தொற்று நிலைமையால் விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், அதிகமான விமானக் கம்பனிகள் விமானப் பொதிகள் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி பொதிகள் போக்குவரத்திற்காக 26 விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சமகால சந்தை நிலைமை மாற்றத்தை கருத்தில் கொள்ளும் போது பிரதான விமானப் பயணப்பாதைகளில் பொதிகள் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என தெரியவந்துள்ளது. அதனால், பொதிகள் போக்குவரத்து ஆற்றல் வளத்தை கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியிடம் தற்போதுள்ள வியாபார கட்டமைப்பை மூலோபாய ரீதியாக மாற்றியமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டித்தன்மையான விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கையாண்டு ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் பொதிகள் போக்குவரத்து விமானத்தை பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. திரிபிடக பாதுகாப்பு சட்டம் உருவாக்கல்
பௌத்த மதத்தின் கேந்திர நிலையமாக எமது நாடு பாராட்டப்படுவதுடன், பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கி பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாகும். 1956 ஆம் ஆண்டு 2500 ஆம் ஸ்ரீபுத்த ஜயந்தி விழாவுக்கு இணையாக திரிபிடகம் சிங்கள மொழிபெயர்ப்புடன் அச்சிடப்பட்டுள்ளது. திரிபிடக சாசனத்தை பாதுகாக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் திரிபிடகம் தேசிய மரபுரிமையாக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் அனுமதியின்றி அதனைப் பாதுகாத்தல், தவறான வரைவிலக்கணங்களை வழங்கல் அல்லது மொழிபெயர்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக திரிபிடகத்தைப் பாதுகாப்பதற்காக 'திரிபிடக பாதுகாப்பு சட்டத்தை' பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கான சட்டமூலத்தை தயாரிக்கவும், சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. புதிய வரி யோசனையை நடைமுறைப்படுத்தல்
ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய, இலகுவான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வினைத்திறன் மிக்க வரி முறைமையினை அறிமுகப்படுத்துவதற்காக 'பொருளாதார மறுமலர்ச்சி ஆரம்பம்' மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரி திருத்தங்கள், 2021 வரவு செலவு திட்டத்தின் யோசனைகளுக்கமைய வரி திருத்தங்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. கட்டுமான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பொதிகள் போக்குவரத்து மேற்கொள்ளும் வாகனங்கள் போன்றவற்றின் பெறுகையும் அவற்றை அரச நிறுவனங்களுக்கு வழங்கலும்
அரசாங்கம் நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், கட்டிட நிர்மாணங்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஆனாலும், கட்டுமான தொழிற்றுறை மற்றும் உள்ளூர் கட்டுமான ஒப்பந்தக்காரர்களின் இயலளவை கருத்தில் கொள்ளும் போது எதிர்பார்க்கின்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிரமமாக உள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நிலைமையின் கீழ் அடையாளங் காணப்பட்ட முக்கிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான மண் அகற்றல் மற்றும் கட்டுமான இயந்திரங்கள், வீதிகள் மற்றும் கட்டிட நிர்மாண இயந்திரங்களும் குறித்த பணிகளுக்கான ஏனைய உபகரணங்கள், முன் தயாரிக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் போக்குவரத்து மற்றும் சேவை வழங்கும் வாகனங்கள் மற்றும் பராமரிப்பு வாகனங்கள் போன்றவற்றை அரசாங்க நிறுவனங்களுக்கு விநியோகிப்பதன் மூலம் குறித்த நிறுவனங்களின் இயலளவை விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, அவ்வாறான உபகரணங்களைத் தயாரிப்பவர்கள் உள்ளூர் முகவர்களுடன் இணைந்து வழங்கப்பட்டுள்ள விநியோகத்தர் கடன் வசதி (Supplier’s Credit Facility) பொறிமுறையின் கீழ், குறித்த பெறுகைச் செயன்முறையை கையாண்டு இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. போதியளவு அரிசியை சந்தைக்கு விநியோகித்தல்
உத்தரவாத விலையின் கீழ் சந்தையில் போதியளவு அரிசி கிடைக்காமை தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்காக மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாவதாக நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி தொடர்ச்சியாக சதொச நிறுவனத்தின் கிளைகள் மூலம் துரிதமாக விநியோகிப்பதற்கும், குறித்த வேலைத்திட்டத்தின் பெறுபேற்றை கருத்தில் கொண்டு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Tue, 03/16/2021 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை