அம்பாறை மாவட்ட தமிழ்மொழிமூல பயிலுநர்களுக்கு இருவார கால பயிற்சி

அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல பிரதேச செயலகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பயிற்சியாளர்களுக்கான முதலாம் கட்ட பயிற்சிகள் வழங்கும் வேலைத்திட்டம் அண்மையில் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வி. ஜெகதீசன், சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் ஆகியோரது பங்குபற்றுதலுடன் இந்த பயிற்சி செயலமர்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதில் கல்முனை, கல்முனை வடக்கு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர், காரைதீவு ஆகிய பிரதேச செயலகங்களில் இணைத்துக்கொள்ளப்பட்ட 158பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் கொரோனா (Covid- 19) தொற்றுநோய் பரவி வரும் ஆபத்தான காலகட்டத்தில், தேசிய செயலணி அபிவிருத்தி பயிற்சியாளர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் சேவைகள் தொடர்பாகவும் சுகாதார நடைமுறைகள் பற்றியும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் விளக்கமளித்தார். 

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.முகம்மட் நசீர், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ. ஜே. அதிசயராஜ், கணக்காளர் வை.கபீபுல்லா, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, பல்நோக்கு தேசிய அபிவிருத்தி செயலணியின் இணைப்பாளர் கேப்டன் கே. எம். தமீம் உட்பட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் இணைப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)       

Wed, 03/03/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை