யாழ்ப்பாண தலைவர்களின் கதைகளை கேட்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது

நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் கிழக்கிலே வாக்குகளை பெறுவதாகும் என  பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டங்களில் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிராமத்தில் வாழும் மக்கள் தமது உற்பத்திப்பொருட்களை இலகுவில் கொண்டுசென்று சந்தைப்படுத்தவும், மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் இந்த கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ்  வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேடன்குளம்  பாலத்தின் புனரமைப்பு பணிகள் சனிக்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 பாராளுமன்ற உறுப்பினர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர்   திருமதி. கலைவாணி வன்னியசிங்கம், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் திருமதி மங்களா சங்கர்,கட்சியின் செயலாளர் எஸ்.ஜெயராஜ்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.     

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் விரைவாக எங்களுடைய பகுதிகளை கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம்.  கொவிட்-19ஆனது உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் தாக்கம் செலுத்தியதன் காரணமாக பாரியளவான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. இதற்கிடையிலும் அரசாங்கம் தனது பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றது.

ஒரு இலட்சம் வீதிகள் திட்டத்திலே எங்களுக்கு 300வீதிகள் வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான பணிப்புரை வந்தது. 50வீதிகளுக்கான வேலைத்திட்டத்தினை தற்போது ஆரம்பித்திருக்கின்றோம். அதேபோல  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் கிடைத்திருக்கின்றது.

இன்று சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை பேசிவருகின்றனர்.எந்தவொரு  வேலைத் திட்டத்தினையும் தமிழ் மக்களுக்கு செய்யாமல்,வீதிகளை அமைத்து குளங்களை அமைத்து நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து,   இவன் வருகின்றான், விகாரைகளை அமைக்கின்றான் என்று கூறினால் என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள். நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம்.

இன்று பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பில் மதுபானசாலைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் இங்கு சொல்ல விரும்பவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்கள் நலன் சார்ந்த மக்களை முன்னேற்றுகின்ற பலப்படுத்துகின்ற கட்சியாகும்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையினால் மட்டக்களப்பு மாவட்டம் நன்மையடைகின்றது. நாங்கள் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உற்பத்திக் கிராமங்கள் வரவிருக்கின்றன.

ஏப்ரல் 21தாக்குதல் நடைபெற்றபோது அதனை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை, அதனை பூசிமெழுகியே எழுதினர்.நல்லிணக்கம் பேசுபவர்களும் ஸஹ்ரான் போன்றவர்கள் செய்த பஞ்சமா பாதக செயல் என சொல்லவில்லை. எந்த ஊடகவியலாளரும் அவருக்கு எதிராக எழுதவில்லை.இன்று அதனுடன் ஒப்பிட்டு சாணக்கியன் பெரிய தலைவராக வரப்பார்க்கின்றார் எனத் தெரிவித்தார்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Mon, 03/15/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை