மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் தரமான வாழ்க்கை வாழ்கின்றனர்

- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்

தமிழ் மக்களை தவறான பாதைக்கு  வழிகாட்டுகின்ற தலைமைகள் தரமான வாழ்க்கை வாழ்வதாக குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகருவதே சரியான வழிமுறை எனவும் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் இழபீடுகளிற்கான அலுவலகத்தின் மூலமாக இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) கிளிநொச்சியில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி உரையாற்றுகையிலேயே கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகருவதன் மூலம் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தனது இந்த அணுகுமுறைக்கு போதிய மக்கள் ஆதரவு கிடைக்குமாயின் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமெனவும் தெரிவித்தார்.

நேற்று 30.25மில்லியன் தொகையில் 392கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது. அதற்கு அமைவாக பொதுமக்கள் சொத்து இழப்பிற்காக 350பேருக்கும், அரச ஊழியர் இழப்புக்காக 25பேருக்கும், காயம் மற்றும் இறப்புகளுக்காக  08பேருக்கும், சேதமடைந்த கோவில்களுக்கான இழப்பீட்டு் தொகைகள் 09கோவில்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தவர்கள் எனும் அடிப்படையில் பொதுமக்கள் சொத்து இழப்புக்களுக்காக 9,690விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், அதில் 5,488பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் 4,202பேரால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று அரச ஊழியர்களால் 1,590விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் 1,448பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காயம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்காக 5,155 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதில் 4,649 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் சேதமடைந்த கோவில்கள் தொடர்பில்  68 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அவற்றில் 55 கோவில்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Wed, 03/03/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை