புதிய வகை வைரஸ் நாட்டில் பரவாதிருக்க துரித நடவடிக்கை அவசியம்

தென் ஆபிரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஏற்படக்கூடிய நிலைமையை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு இடம்பெறாவிட்டால் எதிர்காலத்தில் தொடர் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் பரவிய வைரஸ் தொற்று இங்குள்ள வைரஸ் தொற்று வகைக்கு இணையானது எனவும் அது மிக வேகமாக மற்றவர்களுக்கு பரவக்கூடும் எனவும் புதிய அலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன குறிப்பிட்டார். மேலும், அவசர சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்கும் எனவும் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏதேனுமொரு விதத்தில் இலங்கையில் பரவினால் கட்டுப்படுத்தும் இயலுமை இருக்காது. தற்போது தொற்றுக்குள்ளானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். அதேபோன்று, தற்போதைக்கு பயன்படுத்தப்படும் Covishield தடுப்பூசிக்கும் சிறந்த பாதுகாப்பு உறுதி அளிக்கப்படாது. ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரின் இரத்தத்தை இந்த வைரஸ் தன்மை தொற்றியவர்களுக்கு பயன்படுத்த முடியாது போகும் என விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையர்களும் வௌிநாட்டவர்களும் நாட்டுக்கு வருகை தரும் போது பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள் அடங்கிய புதிய வழிமுறைகளை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு முன்னர் சகல தகவல்களுடன் பூரண அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வழிமுறைகளுக்கு அமைவாக அரசாங்கம் பரிந்துரைத்த தடுப்பூசியை இரண்டு தடவைகளும் ஏற்றியவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.

Mon, 03/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை