உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த ஒரே வழி

அதற்கான செயற்பாடுகள் ஆரம்பம் என்கிறார் ஜனாதிபதி

'வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்குள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும் என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதை நோக்கமாக கொண்டு இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் நேற்று  முன்தினம் (18) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன.

வரிகளை குறைப்பதன் மூலமே அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான 17 வகையான பயிரினங்களை இனங்கண்டு அவற்றின் இறக்குமதியை மட்டுப்படுத்தினோம். தற்போது அவற்றை உள்நாட்டில் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எமது விவசாயிகளுக்கும் எமது கிராமங்களுக்குமே கிடைக்கின்றது. நெல்லுக்கு முன்னர் வழங்கிய 32 ரூபாவை 50 ரூபாவாக அதிகரித்ததன் பின்னர் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

நெல்லின் விலையை அதிகரித்ததன் மூலம் கிடைக்கும் இலாபம் குறித்த ஒரு பிரதேசத்துக்கு மட்டுமன்றி முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கும் கிடைப்பதாகவும், மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் இவ்வாறான விடயங்களால் மக்கள் அடையும் பயன்கள் எதைப் பற்றியும் கூறுவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

Sat, 03/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை