மக்களுக்கு சலுகைகளை வழங்கவே பொதுவான வரிக் கொள்கை

மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சமகால அரசாங்கம் பொதுவான வரிக் கொள்கையை பின்பற்றி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளைச் சட்டங்கள் மீதான விவாத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து  வெளியிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் சமகால அரசாங்கம் பல்வேறு  சலுகைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. வற் வரி குறைக்கப்பட்டதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டது. உழைப்புக்கான வரியையும் குறைத்துள்ளோம். அதேபோன்று வருமான வரி மற்றும் பொருட்களுக்கான வரியையும் குறைத்துள்ளோம். வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் அரச சேவையில் உள்வாங்கியுள்ளோம். மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே அரச வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருகிறோம் .

 2018, 2019ஆம் ஆண்டுகளில் எல்லையற்ற அரச வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வரிக் கொள்கைகளை அரசாங்கம் மாற்றியது. மக்களால் அந்த வரி சுமையை சுமக்க முடியாது போனது. புலிப் பயங்கரவாதம் இருக்கும் தருணத்தில்கூட புறக்கோட்டை கடைத் தொகுதிகள் மூடப்படவில்லை.

ஆனால், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டதால் புறக்கோட்டை கடைத்தொகுதி  ஒருநாள் மூடப்பட்டது. போராட்டத்தை முடக்குவதற்காக மூன்று கடைகளை அப்போதைய நிதி அமைச்சர் சீல் வைக்க நடவடிக்கையெடுத்திருந்தார்.

எமது அரசாங்கம் அமையப்பெற்றதும் சுங்க வரியை குறைக்க நடவடிக்கையெடுத்தோம். தேசிய உற்பத்தியாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பல தீர்மானங்களை எடுத்திருந்தோம். தீர்வை வரியை குறைத்து செஸ் வரியின் மூலம் தேசிய உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துள்ளோம்.

உலக சனத்தொகையான 7.8பில்லியனில் 128மில்லியன் மக்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 27இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியதர வருமானங்களை பெற்றவர்கள் 30வருடங்களின் பின்னர் குறைந்த வருமானத்தை பெறுபவர்களாக மாறியுள்ளனர்.

கொவிட் தொற்று உலகப் பொருளாதாரத்தக்கு பெரும் தாக்கத்தை ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாம் உலகப் போரைவிடவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுனிசெப்பின் அறிக்கையின் பிரகாரம் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Wed, 03/24/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை