தேசிய உற்பத்திகளை சர்வதேச சந்தையில் தனித்துவமாக்குவதே 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கையாகும்

- பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி சர்வதேச சந்தையில் தனித்துவமான போட்டித்தன்மை மிக்க பொருளாதார சூழலை ஏற்படுத்துவது 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கையின் எதிர்பார்ப்பாகும். இதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க முன்னெடுத்தார். 

அவர் ஏற்றுமதி உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எத்தன்மையானதென்று எனக்கு தெரியும். 

அவர் 1972ஆம் ஆண்டு ஏற்றுமதி விவசாய திணைக்களத்தை ஸ்தாபித்தார். நாட்டின் வாசனை திரவியங்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் அடிதளத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க நெறிப்படுத்தினார்கள்.பொருளாதாரத்தை தேசிய மட்டத்தில் பலப்படுத்த நினைக்கும் அரசாங்கங்கள் இறந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்,.... 

எமது நாட்டின் கறுவா உள்ளிட்ட பொருட்களுக்கு உலகில் பெருமளவில் கேள்வி காணப்படுகிறது. ஒல்லாந்தர்,போர்த்துக்கேயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்கு தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் ஆகியவற்றை தேடி வரவில்லை. கறுவா, சாதிக்காய், மிளகு ஆகியவற்றை தேடியே வருகை தந்தார்கள்.  

நாட்டில் தேசிய உற்பத்திகளை முன்னெடுக்காவிட்டால் தொழில்வாய்ப்புக்கள் தோற்றம் பெறாது. தொழில் வாய்ப்புக்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்திற்கு என்னவாயிற்று, அந்நிய செலாவணி ஊடாகவே வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இப்பணம் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறுகிறது என்றார்.  சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய விவசாய ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கும் தேசிய செயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் (27) கஸபகல ரஜமஹா விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  நாடளாவிய ரீதியில் விவசாய கிராமம் அல்லது வலயம் நிறுவும் திட்டத்துக்கு அமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விவசாய கிராமம், வலயம் ஆரம்பித்து வைக்கும் வகையில் பிரதமர் மாங்கன்று ஒன்றினை நாட்டிவைத்தார். 

அத்துடன் புதிய மேல் குளத்தில் பிரதமரினால் மீன்குஞ்சுகளும் விடப்பட்டன.அத்துடன் பிரதமர் கிராமவாசிகளுக்கு மாங்கன்று, கஜூ மரக்கன்று ஆகியவற்றை பகிர்ந்தளித்தார். 

இச்செயற்திட்டத்துக்கு இணையாக ஏனைய கன்றுகளுக்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் கஜூ கன்றுகளை நாட்ட இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது. 

தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி விவசாய உற்பத்தி 2சதவீதமாக காணப்படுகிறது.

இவ்வளர்ச்சி வீதத்தை 2025 ஆம் ஆண்டு 4 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விவசாய முயற்சியாளர்களை ஊக்குவிப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.   

Mon, 03/01/2021 - 15:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை