மியன்மார் அரசியல் பதற்றம்: ஆசியான் முயற்சி ஸ்தம்பிதம்

மியன்மாரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்ட ங்கள் நேற்றும் இடம்பெற்ற நிலை யில் அவை தணிவதற்கான சமிக்ஞைகள் குறைந்து காணப்படுவதோடு இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அண்டை நாடுகளின் முயற்சியும் ஸ்தம்பித்துள்ளது.

வர்த்தகத் தலைநகரான யங்கோனில் நேற்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் வானை நோக்கி சூடு நடத்தியுள்ளனர்.

ஆங் சான் சூச்சியின் ஜனநாயக முறையில் தேர்வான அரசுக்கு எதிராக கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு கடந்த செவ்வாய்க்கிழமையும் பொலிஸார் சூடு நடத்தியுள்ளனர்.

சின் மாநிலத்தில் அனைத்து நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். கடந்த செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மியன்மார் தொடர்பில் ஆசியான் நாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் தீர்வு ஒன்றை எட்டுவதில் தோல்வி கண்டுள்ளது. அமைதி காப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் அழைப்பு விடுத்தபோதும், ஆங் சான் சூச்சி உட்பட கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் அழைப்பு விடுத்தன.

“சாதகமாக, அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான வகையில் மியன்மாருக்கு உதவ ஆசியான் தயாராக உள்ளது என்பதை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று ஆசியான் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் மியன்மார் அரச ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஆசியான் கூட்டத்தில் பங்கேற்ற இராணுவம் நியமித்த வெளியுறவு அமைச்சர், “பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் பற்றி அந்த செய்தியில் எதுவும் கூறப்படவில்லை.

Thu, 03/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை