சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் குடாஓயா கொலனி மக்கள்

மலையகம்  நீர்வளம் மிக்க பிரதேசமாக காணப்படுகின்ற போதிலும் இன்னும் எத்தனையோ பல பகுதிகளில் மக்கள் சுத்தமான குடிநீர் வசதியின்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

அந்தவகையில்  ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில்  சுமார் ஒரு மீற்றர். தொலைவில் அமைந்த குடா ஓயா கொலனி மக்கள் கடந்த 15வருட காலமாக சுத்தமான குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரிய விடயமே.

குடாஓயா கொலனியில் சுமார் 125அதிமான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்வதற்கு நிலங்களை வாங்கிய போதிலும் பலர் குடிநீர் வசதியின்மையால் வீடுகளை அரைவாசி கட்டிய நிலையில் கைவிட்டுள்ளனர்.

 நீர் வசதியின்மையால் இங்கு வாழும் மக்கள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குடிப்பதற்காக சுமார் இரு மீற்றர் தொலைவிலிருந்து கரடு முரடான பாதையில் இங்குள்ள மக்கள் குடிநீரினை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் குடிநீர் பெற்றுக்கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபா செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் மழை நீரினை சேமித்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.குளிப்பதற்கு நீர் இல்லாமையால் இரண்டு கிலோமீற்றர் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வீடு கட்டிய பலர் குடிநீர் வசதியின்மையால் வீடுகள் இருந்தும் வாடகை வீடுகளில் வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.மற்றும் சிலர்  பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் காணிகளை காசு கொடுத்து வாங்கிய போதிலும் அவர்கள் அனைவருக்கும்; வீடுகளை கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தனியார் தோட்டத்தில் குத்தகை செலுத்தி சிரமதான முறையில் குடிநீர் கிணற்றினை நிர்மாணித்த போதிலும் ஒரு சிலர் மாத்திரம் பயனடைவதாகவும் மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசியல் தலைவர்களுக்கும் தெரிவித்த போதிலும் இவர்கள் தொடர்பாக உரிய அக்கறை செலுத்துவதில்லை என்று இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த கொலனியில் வாழும் வயோதிபர்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தொடர்ந்து குடிநீர் வசதியின்றி துன்பப்படும் மக்களின் அவல நிலையினை கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

Wed, 03/17/2021 - 16:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை