தடுப்பூசியை பெறுவதில் சமத்துவம்: வளர்ந்து வரும் நாடுகள் கோரிக்கை

கொவிட்–19 தடுப்பு மருந்துக்கான காப்புரிமையை தற்காலிகமாக தள்ளுபடி செய்யும்படி தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் 100 க்கும் அதிகமான நாடுகள் உலக வர்த்தக அமைப்பை கேட்டுள்ளது. நோய் எதிர்ப்பில் இருந்து தமது மக்கள் தடுக்கப்படுவதாக இந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மூலம் இலகுவாக பெறத்தக்க வகையில் மருத்துவ உற்பத்திகளின் புலமைச் சொத்து உரிமையில் விலக்கு அளிப்பதற்கு உலக வர்த்தக அமைப்பிடம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இரு நாடுகள் அழைப்பு விடுத்திருந்தன. அது தொடக்கம் இந்த கோரிக்கையை விடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போது 100ஐ தாண்டியுள்ளது. எனினும் புலமைச் சோத்து உரிமையில் விலக்கு அளிப்பது தனியார் முதலீட்டிலான விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட பல செல்வந்த நாடுகளும் குறிப்பிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கொள்வனவில் செல்வந்த நாடுகள் தமது நாட்டு மக்கள் தொகையை விடவும் அதிகமான தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் நிலையில் அது வறிய நாடுகள் தடுப்பு மருந்தை பெறும் வாய்ப்பை தடுப்பதாக உள்ளது.

அனைத்து கொரோனா தடுப்பு மருந்தின் 75 வீதமானதை வெறுமனே 10 நாடுகள் வாங்கி இருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கடந்த மாதம் கூறி இருந்தார். இது 'பெருமளவு சீரற்றதும் நியாயமற்றதுமாக உள்ளது' என்று அவர் விபரித்தார். குறைந்தது 130 நாடுகள் இன்னும் ஒரு டோஸ் கொவிட்–19 தடுப்பு மருந்தை கூட பெறவில்லை என்று குட்டரஸ் குறிப்பிட்டிருந்தார்.

Fri, 03/12/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை