Header Ads

கொள்கலன் கப்பல் விடுவிப்பு; விரைவில் போக்குவரத்து ஆரம்பம்

கடந்த ஒரு வாரமாக எகிப்தின் சுயஸ் கால்வாயை அடைத்து இருந்த இராட்சத கொள்கலன் கப்பல் பகுதி அளவில் விடுவிக்கப்பட்டதாக சுயஸ் கால்வாய் அதிகாரசபை அறித்துள்ளது. இதன்மூலம் அந்த கால்வாயில் விரைவில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுமார் 80 வீதம் கப்பல் சரியான திசைக்குத் திரும்பியுள்ளது. கப்பலின் பின்புறம் கரையில் இருந்து 102 மீற்றர் சரியான திசையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. முன்னர், அது கரையில் இருந்து 4 மீற்றராக இருந்தது.

400 மீற்றர் நீளம் கொண்ட எவர் கிவன் என்ற இந்தக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் காற்றுக்கு மத்தியில் கால்வாயின் தென் பக்கமாக குறுக்காக சிக்கிக்கொண்டது. இதனால் ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையிலான மிகக் குறுகிய நீர்ப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் கப்பல் தரைதட்டிய பகுதியில் மணல் தோண்டி எடுக்கப்பட்டு இழுவை படகுகளால் இழுக்கப்பட்டு கப்பலை விடுவிக்கும் முயற்சி தீவிரமாக இடம்பெற்றது. தொடர்ந்து நேற்றும் இந்தக் கப்பலை விடுவிப்பதற்கு இழுவைப் படகுகளை பயன்படுத்தி கால்வாய் அதிகாரிசபை மற்றும் நெதர்லாந்து நிறுவனமான ஸ்மித் லெவ்வேஜ் கடுமையாக பாடுபட்டது.

எவர் கிவன் கப்பம் கால்வாயின் கிழக்குக் கரைக்கு இணையாக பெரும்பாலும் நேராக வந்திருப்பதாகவும் அதனை மேலும் இழுக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கால்வாய் அதிகாரசபை நேற்று தெரிவித்தது. கால்வாயின் பரந்த பகுதியான ஏரிப் பகுதிக்கு இந்தக் கப்பல் செலுத்தப்பட்ட பின் கால்வாயின் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

கொள்கலன் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள், எண்ணெய் டாங்கர்கள் மற்றும் திரவ இயற்கை வாயு மற்றும் திரவ பெற்றோலிய வாயு கப்பல்கள் உட்பட குறைந்தது 369 கப்பல்கள் இந்த கால்வாய் ஊடாக பயணத்தைத் தொடர காத்திருப்பதாக சுயஸ் கால்வாய் அதிகாரசபை தலைவர் ஒசாமா ரபீ தெரிவித்தார்.

“இறைவன் நாடினால், இன்று (திங்கட்கிழமை) மதியம் ஆகும்போது கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியுமாக இருக்கும்” என்று எகிப்து அரச தொலைக்காட்சிக்கு அவர் தெரிவித்தார். “ஒரு வினாடியைக் கூட நாம் வீணாக்க மாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்தக் கப்பல் தொடர்ந்து மணல் மற்றும் களிமண்ணில் சிக்கி இருப்பதால் கப்பலின் அடிப்பகுதிக்கு நீரை அதிக அழுத்தத்துடன் பீச்சும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த முயற்சி வெற்றிபெறாவிட்டால் கப்பலில் இருக்கும் கொள்கலன்கள் அகற்றப்படவுள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டால் கப்பல் போக்குவரத்தில் மேலும் தாமதம் ஏற்படும்.

எனினும் கப்பலை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அங்கு சாதகமாக அலை இருப்பதால் கொள்கலன்களை அகற்ற வேண்டிய தேவை இருக்காது என்றும் இந்த மீட்பு நடவடிக்கையுடன் தொடர்புபட்ட தரப்பு ஒன்றை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“கப்பல் நகர்வது நல்ல செய்தியாகும். என்றாலும் அது தொடர்ந்து சேற்றில் சிக்கியுள்ளது. இழுப்பதை கையாளும் இரண்டாவது பெரிய நங்கூரம் ஒன்று காலையில் வந்தது. அதன்மூலம் கப்பலை விடுவிக்க முடியும் என்ற எதிர்பார்க்கிறோம்” என்று மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானை சேர்ந்த எவர் கிரீன் மரைன் எனும் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் கப்பல் ஜப்பானைச் சேர்ந்த ஷோயி கிசென் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, பனாமாவில் இந்தக் கப்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஷோயி கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ ஹிகாகி இந்த கப்பல் சேதம் அடைந்ததாக தெரியவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

“இந்த கப்பலுக்குள் நீர் புகவில்லை. இது மீண்டும் மிதக்கத் தொடங்கும்போது வழக்கம்போல இயங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஆசியா ஐரோப்பாவுக்கிடையே சுற்றிச் செல்லும் மாற்றுப் பாதையில் 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்றுள்ளன. அவை குறித்த இடங்களைச் சென்றடைய மேலும் 2 வாரங்கள் ஆகலாம் என்பதால், பொருட்களின் விநியோகம் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சுயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.

2015ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.

Tue, 03/30/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.