இலங்கை கடல் எமது மீனவருக்கே சொந்தம்

- அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு

இந்திய மீன்வர்களின் பிரச்சினையை உடனடியாகத் தடுக்க வேண்டுமானால் நீங்கள் சென்று அவர்களை பிடித்து வாருங்கள், பிடிப்பது என்றால் நானும் வருகின்றேன். அவர்களை பிடிப்போம் என கடற்றொழிற்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை வன்னியின் தேசிய கைத்தொழில் உற்பத்திகளை மேம்படுத்தும் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் கடலில் எரிபொருள் எடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோன்று கடல் வளத்திலும், நீர் வேளாண்மையிலும் நாம் பொருளாதாரத்தை ஈட்டலாம். விடத்தல் தீவில் 169 ஹெக்ரெயர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதலீட்டாளர்களை உள்வாங்கினாலும், உள்ளூர் மக்களையும் இணைத்துக் கொண்டு உற்பத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

பேசாலையின் வடகடல் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் துறைமுகம் ஒன்று அமைக்க இருந்தது. சிலரது எதிர்ப்பால் மன்னாரின் வடகடலில் மேற்கொள்ளவிருந்த திட்டம் கைவிடப்பட்டது. தென்கடலில் அமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கு முதலிட தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.

அதில் அந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத் துறைமுகம் கட்டி முடிய காலம் சென்றால் அங்குள்ள மீனவர்களுக்கு பயிற்சிகள், மானியங்கள் வழங்கி ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும். வேறு பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் வரலாம்.

இலங்கைக் கடல் இலங்கை மீனவர்களுக்கு சொந்தம். அதேநேரம் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுமை வழங்க வேண்டும். இது தான் எமது அரசாங்கத்தின் கொள்கை. இந்திய மீனவர்களின் வருகை தொடர்பான பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு, தமிழ் நாடு அரசு, இந்திய கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Sat, 03/20/2021 - 19:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை