சூச்சி மீது மியன்மார் இராணுவம் கடுமையான புதிய குற்றச்சாட்டு

மியன்மாரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூச்சி 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மற்றும் 11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாகப் பெற்றதாக மியன்மார் இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2021 பெப்ரவரி 1ஆம் திகதி மியன்மாரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்த பின், சூச்சி மீது இராணுவம் கூறிய குற்றச்சாட்டுகளிலேயே இது மிகப் பெரியது மற்றும் கடுமையானதாக இது உள்ளது.

இதுவரை சூச்சி சட்ட விரோதமாக பணம் மற்றும் தங்கத்தைப் பெற்றதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், சூச்சி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மியன்மாரில் இராணுவம் "மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களைச்" செய்து வருகிறது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆய்வாளர் ஒருவர் குற்றஞ்சுமத்தி உள்ளார்.

"மியன்மார் தற்போது கொலைகார, சட்ட விரோதமான ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தொடர்ந்து மற்றவர்களைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்ற குற்றங்களைச் செய்து வருகிறார்கள்" என ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையிடம் ஐ.நாவின் தோமஸ் ஆண்ட்ரூவ்ஸ் தெரிவித்தார். அவரது கூற்றை மன்னிப்புச் சபை மனித உரிமைகள் குழுவும் உறுதிப்படுத்துகிறது.

மியன்மார் தலைவர்கள் மற்றும் மியன்மார் இராணுவத்துக்குச் சொந்தமான அந்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என ஆண்ட்ரூவ் கூறினார். இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைத் தொடவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்கா 10 ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர்கள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது தடை விதித்திருப்பது நினைவுகூரத்தக்கது. இதில் தற்போதைய பொறுப்புத் தலைவரும் அடக்கம்.

Sat, 03/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை