இரு தரப்பு பரஸ்பர நாணய பரிமாறல் உடன்படிக்கை

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு பணப் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியன மேற்படி இருதரப்பு பணப் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான ஒப்பந்த கைச்சாத்து நேற்று இடம்பெற்றது. அதற்கிணங்க சீன மக்கள் வங்கி இலங்கை மத்திய வங்கியுடன் 1.5 பில்லியன் அமெரிக்கன் டொலர் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணப் பரிமாற்ற உடன்படிக்கை மூன்று வருட காலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் பரிந்துரைக்கு அமைய இப்பணப்பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணப்பரிமாற்ற உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷ்மன் மற்றும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் கலாநிதி யீ கென் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சீனாவிடமிருந்து பெருமளவில் பொருட்கள் இறக்குமதியை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த வருடம் சீனாவிலிருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அது இலங்கை இறக்குமதியில் நூற்றுக்கு 22.3 வீதமாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Wed, 03/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை