மியன்மாரில் போராட்டக்காரருக்கு எதிராக இராணுவச் சட்டம் அமுல்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஒரே நாளில் கடந்த ஞாயிறன்று அதிகம் பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து மேலும் பல மாவட்டங்களில் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மற்றும் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்களில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யங்கோன் நகரில் அதிக உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சியின் தலைவரான ஆங் சான் சூச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருந்த நிலையிலேயே அங்கு ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

எனினும் இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று இடம்பெறவிருந்த வீடியோ மூலமான அவரது விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெறும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் தலைவர் சூச்சியை விடுவிக்கும்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. அவரது கட்சி கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் சூச்சி அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் அவை சோடிக்கப்பட்டவை என்று சூச்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சதிப்புரட்சியை அடுத்து சூச்சி கட்சியைச் சேர்ந்த பலரையும் இராணுவம் கைது செய்தது. கடந்த ஆண்டு தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. எனினும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன வர்த்தக நிறுவனங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டின் மிகப்பெரிய நகரான யங்கோனின் இரு மாவட்டங்கள் மீது இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது நேற்று யங்கோன் மற்றும் மண்டலாயின் ஏனைய பகுதிகளுக்கு விரிபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியுமாகியுள்ளது. மியன்மார் இராணுவத்திற்கு சீனா உதவுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டும் நிலையிலேயே சீன இலக்குகள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறையால் மியன்மாரில் இதுவரை 120க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் என்ற கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் மண்டலாய் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்று புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. மத்திய நகரங்களான மன்கியான் மற்றும் அங்கலானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tue, 03/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை