கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறோம் இரண்டு ஒப்பந்தங்களில் இருக்க முடியாது

- சம்பள நிர்ணய சபை தீர்மானித்த 1,000 ரூபாவை வழங்கத் தயார்
- தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் இனி கிடைக்காத நிலை ஏற்படும்
- பெருந்தோட்ட தொழிற்துறை வீழ்ச்சியுற்றால் தொழிற்சங்கங்களும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்

சம்பள நிர்ணய சபையினூடாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொகை தீர்மானிக்கப்பட்டால் அதனை நாங்கள் வழங்கத் தயார். அந்த தொகை நாங்கள் மட்டுமல்ல சிறுதோட்ட உரிமையாளர்களாக இருக்கும் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேரும் வழங்க வேண்டும். ஆனால், நாங்கள் இரண்டு ஒப்பந்தத்தில் இருக்க முடியாது. ஆகவே கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறோம் என முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் 300 நாட்களுக்கு   வேலை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இப்போது நாளொன்றுக்காக அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்க முடியும்.

எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிற்துறை வீழ்ச்சியடைந்தால் தொழிற்சங்கங்களும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டுமென்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை நேற்று தெரிவித்தார்.

டிக்கோயா தரவளை முகாமையாளர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் ஒருபோதும் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபாய் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன்வைத்த போது 2019 ஆம் ஆண்டே நாங்கள் ஆலோசனையொன்றை கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களிடம் முன்வைத்தோம்.

வெறுமனே சம்பள உயர்வை செய்ய முடியாது. ஆகவே தான் தொழில்முறையில் சில ஆலோசனைகளை முன்வைத்தோம். அந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றிருக்க முடியும் .

ஆனால், இப்போது சம்பள நிர்ணய சபையினூடாக சம்பள உயர்வு தொகை தீர்மானிக்கப்பட்டால் அதனை நாங்கள் வழங்கத் தாயார். அந்த தொகை எங்களுக்கு மட்டுமல்ல சிறுதோட்ட உடமையாளர்களாக இருக்கும் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேரும் வழங்க வேண்டும் . ஆனால் , நாங்கள் இரண்டு ஒப்பந்தத்தில் இருக்க முடியாது, ஆகவே கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் சம்பளம் மட்டுமல்ல அவர்களின் சுகாதார நலன் விடயங்களிலும் பல்வேறு விடயங்களை செய்து வந்தோம். இந்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு இனி கிடைக்காத நிலை தோன்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதேபோல இந்த கூட்டு ஒப்பந்த உடன் படிக்கை தொழிலாளர்களுக்கு சாதகமானதாகவே இருந்தது.

எதிர்காலத்தில் பெருந்தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சியடைந்தால் அதற்கான பொறுப்பை தொழிற்சங்கங்களும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Thu, 03/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை