சூழல் சீரழிவுக்கு வழிகோலிய அதிக பிளாஸ்டிக் இறக்குமதி

2012 முதல் 2018 காலப்பகுதியை சுட்டிக்காட்டிய 'கோப்' குழு

சட்டத்தை திருத்தி இறக்குமதியை கட்டுப்படுத்த சுற்றாடல் அமைச்சுக்கு அறிவுறுத்தல்

மொத்தம் 184 பில்லியன் ரூபா நிதிச் செலவில் 3353.8 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் 2012 முதல் 2018 வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுற்றுச் சூழல் சீரழிவுகள் அதிகரித்துள்ளதால் தேசிய சுற்றுச்சூழல் சட்டம் விரைவில் திருத்தப்பட வேண்டுமெனவும் கோப் குழு சுற்றாடல் அமைச்சுக்கு அறிவித்து கோப் குழு துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்திலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், அதன் உறுப்பினர்களான அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவார்ட் கப்ரால், நாலக்க கொடஹேவா, ஜெயந்த சமரவீர, ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, பிரேமநாத் சி.தொலவத்த, சாணக்கியன் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கழிவு முகாமைத்துவத்தை முறையற்ற விதத்தில் நடைமுறைப்படுத்தியதன் காரணமாக பிளாஸ்டிக் இறக்குமதி அளவுகள் தாங்கமுடியாத அளவில் அதிகரித்துள்ளதாகவும் இதன் விளைவாக குறிப்பிடத்தக்களவு சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழு கண்டறிந்துள்ளது. பொலிதீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலுக்கு நட்பான மாற்று தயாரிப்புகளை நுகர்வோருக்கு வழங்குவதை ஊக்குவிக்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோப் குழு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இறக்குமதி தரவுகளின் பகுப்பாய்வின் பிரகாரம் 2012 முதல் 2017 வரை பிளாஸ்டிக் இறக்குமதியின் அளவு வேகமாக அதிகரித்துள்ளதுடன் 2017இல் பிளாஸ்டிக் இறக்குமதி அளவு மிகவும் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக புதுபிக்கப்படாதுள்ள தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் திருத்தத்தை விரைவுபடுத்துமாறு கோப் குழுத் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் எம்.பி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட போதிலும், இதுவரை செயல்படுத்தப்படாதது பிரச்சினையாகும். சட்டத்தை திருத்தும் பணியில் சில நிறுவனங்கள் தடையாக இருப்பதாகவும், பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல், அகற்றுவது மற்றும் நிர்வகிப்பதில் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஈடுபட வேண்டும். உணவு பொதியிடல் செய்யும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவது தொடர்பான விதிகளை விரைவாக வலுப்படுத்த வேண்டும்.

தற்போது சந்தையிலுள்ள உணவு பொதியிடல் செய்யும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பில் எந்த தரமும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும் விற்பனை விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. இவற்றுக்கு ஒரு நிலையான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியுள்ளது.

மக்காத மூலப்பொருள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்பட்ட பின்னர் சூழலில் நிகழும் வேதியல், உயிரியல் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்த ஆய்வும் செய்யப்படாததால் ஆராய்ச்சியின் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்திற்குள் கோப் குழுவுக்கு தெரிவிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கழிவு மேலாண்மை தொடர்பான தேசிய கொள்கை 2019 அக்டோபர் 10 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டாலும், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லையென குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Fri, 03/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை