மியன்மார்: சுற்றிவளைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிப்பு

மியன்மாரின் யங்கோன் நகரில் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைதியான முறையில் கடந்த திங்களன்று பேரணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 பேர், குடியிருப்புக் கட்டடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் அவர்கள் கட்டடங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

எனினும் கடந்த திங்கட்கிழமை இரவு 40 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தடுத்துவைக்கப்பட்டோரை விடுவிக்கும்படி ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கேட்டுக்கொண்டிருந்தார். வன்முறையைப் பயன்படுத்தாமலும் கைது செய்யாமலும் இராணுவம் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சில வெளிநாட்டுத் தூதரகங்களும் குட்டரஸின் கருத்துகளை எதிரொலித்தன. கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இந்த போராட்டங்களில் இதுவரை 54 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவேளை, மியன்மார் இராணுவம், மக்கள்மீது போர் தொடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மாரின் தூதர் டொக்டர் சாசா கூறியுள்ளார்.

அவர் கலைக்கப்பட்ட மியன்மார் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். நாட்டின் இராணுவம் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்துவதாக டொக்டர் சாசா குறிப்பிட்டார்.

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை