இறக்குமதி செய்யும் சீனி, பருப்பு, பால்மா குறித்து தீவிரமான கண்காணிப்பு

- சுங்கத்  திணைக்களப் பணிப்பாளர்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தனியார் களஞ்சியசாலைகளுக்கு அனுப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய தேங்காயெண்ணை மீள் ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான போதிய இடவசதி இல்லாமல் உள்ள நிலை சுங்கம் மற்றும்  நுகர்வோர்  அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் நிலையிலும்  மேற்படி தீர்மானத்தை சுங்கம் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தில் இருந்து தனியார் களஞ்சிய சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த சர்ச்சைக்குரிய தேங்காய்எண்ணெய்  அதே நிலையில் உள்ளதா அல்லது அவற்றில் ஒரு தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக விசேட சுங்க அதிகாரிகள் குழு ஒன்றை சம்பந்தப்பட்ட களஞ்சியசாலை களுக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் சுங்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட அதே அளவு தேங்காய் எண்ணெய் அங்கு காணப்படாவிட்டால் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இவ்வாறான இறக்குமதிக்கு இது முதல் தடவை அல்ல என குறிப்பிட்ட அவர் 2019ஆம் ஆண்டு 600மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப் பட்டதாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்த அவர் இம்முறை அது பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

தேங்காய் எண்ணெயில் மட்டுமன்றி சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட பொருட்களிலும் இவ்வாறான இரசாயனங்கள் கலக்கப்படலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டதுடன் சுங்கத் திணைக்களம் அவ்வாறான நடவடிக்கைகளில் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/30/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை