மோடியின் வருகைக்கு எதிராக பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக பங்களாதேஷில் மூன்றாவது நாளாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடான பங்களாதேஷில் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஐவர் கொல்லப்பட்டதோடு சனிக்கிழமை மேலும் ஆறு பேர் பலியாகினர். கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழுவான ஹபாசாத்தே இஸ்லாம் அமைப்பே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துகிறது. இதில் மாணவர்கள், இடதுசாரிகள் மற்றும் ஏனைய இஸ்லாமியவாதக் குழுக்களும் பங்கேற்றுள்ளனர்.

பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டியே மோடி அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்கிறார். எனினும் அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வீதியில் டயர்கள் மற்றும் தளபாடங்களை எரித்து மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பி வருகின்றனர்.

பங்களாதேஷ் அரசு சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் அந்நாட்டு அரசில் நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் கணாமல்போகச்செய்தல் உட்பட சர்வாதிகாரப் போக்கு அதிகரித்திருப்பதாக மனித உரிமை குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

Mon, 03/29/2021 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை