ரொஹிங்கிய அகதி முகாமில் பாரிய தீ: எழுவர் உயிரிழப்பு

பங்களாதேஷின் ரொஹிங்கிய அகதி முகாம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீச்சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிய நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தீக்கான காரணத்தை கண்டறிய பங்களாதேஷ் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

தென் கிழக்கு நகரான கொக்ஸ் பசாருக்கு அருகில் இருக்கும் முகாலி முகாமில் கடந்த திங்கட்கிழமை மாலை பரவிய இந்தத் தீயினால் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் கருகின.

இந்த சம்பவத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்திருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இதில் நான்கு சிறுவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீயினால் 17,000க்கும் அதிகமான முகாம்கள் அழிந்திருப்பதோடு ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தலைவர் சஞ்ஜீவ் கப்லி தெரிவித்தார்.

இந்த பகுதியில் இருக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரொஹிங்கிய அகதிகளில் பத்தில் ஒரு பகுதியினரான சுமார் 124,000 பேர் வசிக்கும் முகாமின் நான்கு பகுதிகளில் தீ பரவியதாக அவர் தெரிவித்தார்.

இந்த அகதி முகாமை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் முற்கம்பி வேலிகளில் சிறுவர்கள் உட்பட பலரும் சிக்கி காயத்திற்கு உள்ளானதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி சர்வதேச அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து 2019 இல் அந்நாட்டை விட்டு தப்பிவந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளே இங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

Wed, 03/24/2021 - 07:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை