ஆணைக்குழுவின் அறிக்கையை மறைக்கும் தேவை எமக்கில்லை

நல்லாட்சி அரசின் கவனயீனமே காரணம்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மறைப்பதற்கு எந்தவொரு தேவையும் தமது அரசாங்கத்திற்கு கிடையாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ​தெரிவித்துள்ளார். அது தொடர்பில் எந்தவொரு நபர் அல்லது தரப்பினருடனும் 'டீல்' எதனையும் மேற்கொள்ளவில்லையென குறிப்பிட்டுள்ள அவர், எவரையும் சந்தோஷப்படுத்த வேண்டிய தேவை தமது அரசாங்கத்துக்கு கிடையாதென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஒரு தேசிய பிரச்சினையாகும் என தெரிவித்துள்ள அவர், அதனை அரசியலாக்க முனைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்படி குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதல் தொடர்பில் பேராயரின் கவலை சாதாரணமானது. அவர் அதுபற்றி பேசுவதில் தவறில்லை. மேற்படி தாக்குதல் நடக்கும்போது மௌனமாகவிருந்த அன்றைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் தற்போது கறுப்புக்கொடி உயர்த்துவது கவலைக்குரியது மட்டுமன்றி அதுகேலியான விடயமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி;

நானோ இந்த அரசாங்கமோ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விற்று அதிகாரத்திற்கு வரவில்லை. அந்த தாக்குதலை எம்மீது சுமத்தி அரசியல் லாபம் பெறுவதற்கு சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

மேற்படி தாக்குதல் சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

சிலர் முன்னாள் ஜனாதிபதி மீது அந்தக் குற்றத்தை சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். அதேவேளை 19வது திருத்தத்தைக் கொண்டு வந்து அவருக்கான அதிகாரத்தை குறைப்பதற்கு செயற்பட்டோர் இப்போது மௌனமாகவுள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யாரென்பது தொடர்பில் விசாரணை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எமது அரசாங்கம் அதற்கான தண்டனை பெற்றுக் கொடுப்பதை உரிய முறையில் மேற்கொள்ளும். நாம் தமிழ் பயங்கரவாதம் இஸ்லாம் பயங்கரவாதம் என எதனையும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.

அனைத்து பாடங்களிலும் பெயிலானவர்கள் என்னை பெயிலானவனென கூறுகின்றனர். நான் பாஸாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இராணுவத்தின் உயர் பதவியிலிருந்து வெற்றிகரமாக செயற்பட்டு 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்தேன். கௌரவமான பட்டத்தை பெற்றுக்கொள்ள அதுவே போதுமானது.

அந்த கௌரவப் பட்டம் எனது ஜனாதிபதி பதவிக்கு போனஸ் புள்ளியாகும். இப்போது இரட்டை பி.எச்.டி. முடிப்பதற்கான நடவடிக்கைகளிலேயே செயற்பட்டு வருகின்றேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Mon, 03/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை