மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் மேலும் இருவர் சுட்டுக்கொலை

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக பலம் மிக்க வர்த்தக சங்கம் ஒன்று நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தலையில் சுடப்பட்ட நிலையில் இரு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு நகரான மிட்கினா வீதியில் இரு ஆண்களின் உடல்கள் கிடக்கும் படங்கள் பேஸ்புக் சமூகதளத்தில் போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அருகில் இருக்கும் கட்டடங்களில் இருந்து பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நாளாந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை 50 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரிய நகரான யாங்கோன், அதேபோன்று இரண்டாவது பெரிய நகரான மண்டலாய் மற்றும் ஏனைய பல நகரங்களிலும் நேற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ஒன்பது தொழில் சங்கங்களை உள்ளடக்கிய பலம்மிக்க தொழிற்சங்கம் ஒன்று நேற்று தேசிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் யாங்கோன் நகரில் கடைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பதவி கவிழ்க்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் பிரசார முகாமையாளர் ஒருவர் பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சோதனைகளில் 41 பேர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பாதுகாப்பு படையினரின் பலப்பிரயோகம் மேற்குலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகி இருப்பதோடு இராணுவத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

Tue, 03/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை