அனைத்து விடயங்களிலும் நாங்கள் போராடவேண்டிய நிலையில் உள்ளோம்

- தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா 

நாங்கள் அனைத்து விடயங்களிலும் போராடவேண்டிய நிலையில் உள்ளோம். வடக்கு கிழக்கை பௌத்த மயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் 

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திர புரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக நேற்று ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புக்களும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.   குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள்,மக்கள் என பலர் கலந்து கொண்டனர் . 

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கொண்டவாறு தெரிவித்தார். 

அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன் வருகின்ற 23திகதி அகழ்வுகளில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகின்றது. 

பல ஆயிர வருடங்களாக இருக்கும் இந்த ஆலயத்தினை ஆராய்ச்சி செய்து பார்க்க இவர்கள் நிற்கின்றார்கள். இந்த இடத்தினை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர்.

அவர்களே இவ் ஆய்வினை செய்ய பௌத்த குருமாருடன் ஆர்வமாக உள்ளனர்.  இவற்றை தடுப்பதற்கு நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தடை உத்தரவை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

பரந்தன் குறூப் நிருபர் 

Mon, 03/22/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை