மியன்மார் படையினரால் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை

மியன்மாரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மாத இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் இராணுவத்தின் ஒடுக்குமுறையில் கொல்லப்பட்ட மிக இளம் வயதினராக இந்த சிறுமி உள்ளார்.

மண்டலேயில் இருக்கும் தனது விட்டில் வைத்து இந்த சிறுமி கொல்லப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இராணுவ வீரர்கள் சிறுமியின் தந்தையைச் சுட்டதாகவும் அப்போது தந்தையின் மடியில் உட்கார்ந்திருந்த சிறுமி காயப்பட்டதாகவும் சிறுமியின் சகோதரி 'மியன்மார் நவ்' செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கொல்லப்பட்ட சிறுமியின் பெயர் கின் மியோ சிட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஒன்று விரைந்து சென்ற போதும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்று மீட்புதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் அதற்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கொல்லப்பட்டவர்களில் 20க்கும் அதிகமான சிறுவர்கள் இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது.

இதில் மொத்தம் 164 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் கூறியபோதும் குறைந்தது 261 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் என்ற செயற்பாட்டுக் குழு குறிப்பிட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் உயிரிழந்தது குறித்து செவ்வாயன்று கவலை வெளியிட்டுள்ள மியன்மார் இராணுவம், நாட்டில் நடக்கும் 'அராஜக' செயல்களுக்கு காரணம் அவர்கள்தான் என்று குற்றம் சாட்டியது.

Thu, 03/25/2021 - 07:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை