இஸ்ரேல் தேர்தல் முடிவு: ஆட்சி அமைப்பதற்கு மீண்டும் இழுபறி

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள தேவையான ஆசனங்களை பெறத் தவறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலின் 90 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நெதன்யாகுவின் வலதுசாரி தரப்புகள் ஆட்சி அமைப்பதற்கு எட்டு ஆசனங்கள் குறைவாக உள்ளது.

இந்நிலையில் போட்டி வலதுசாரி கட்சி ஒன்று ஏழு ஆசனங்களை பெற்றிருப்பதால் ஆட்சி அமைக்க அவர்களின் ஆதரவு நெதன்யாகுவுக்கு அவசியமாக உள்ளது.

இந்தத் தேர்தலின் இறுதி முடிவு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான உறவிலும் தீர்மானகரமாக அமையவுள்ளது.

இஸ்ரேலில் நீண்டகாலம் பதவியில் உள்ள தலைவரான நெதன்யாகு, தனது லிகுட் கட்சி தலைமையில் வலதுசாரி அரசு ஒன்றை அமைக்கப்போவதாக உறுதி அளித்துள்ளார்.

நெதன்யாகுவின் முன்னாள் விசுவாசியான நப்டாலி பென்னட் தலைமையிலான சிறிய வலதுசாரி கட்சி ஆட்சி அமைப்பதில் தீர்க்கமான சக்தியாக உருவெடுத்துள்ளது. எனினும் நெதன்யாகுவுக்கு ஆதரவளிப்பது அல்லது அவரை வெளியேற்ற விரும்பும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிப்பது பற்றி அந்தக் கட்சி வெளிப்படையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

“இஸ்ரேலிய தேசத்திற்கு சிறந்ததையே நான் செய்வேன்” என்று பென்னட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ட்விட்டரில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் நெதன்யாகும், “எனது தலைமையின் கீழ் லிகுட் மற்றும் வலதுசாரிகளுக்கு பெரு வெற்றியை வழங்கி உள்ளீர்கள். தற்போது லிகுட் மிகப்பெரிய கட்சியாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான யெயிர் லபிட், அவரது தலைமையிலான மையவாத யெஷ் அடிட் சுமார் 17 ஆசனங்களை வென்றிருக்கும் நிலையில், தமது கட்சி பெரும் அடைவை பெற்றிருப்பது பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். “இஸ்ரேல் தேசத்தில் விவேகமான அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்தையும் செய்வேன்” என்று உறுதி அளித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக நடைபெற்ற இந்தப் பொதுத் தேர்தல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு தீர்க்கமானதாக பார்க்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டை முகம்கொடுத்திருக்கும் நெதன்யாகுவை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

முந்தைய மூன்று தேர்தல்களிலும் எந்தத் தரப்பும் போதுமான பெரும்பான்மையை பெறாத நிலையில் ஸ்திரமான கூட்டணி ஒன்றை அமைக்க முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் புதிய கூட்டணி அரசு ஒன்றை அமைக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் இஸ்ரேல் ஐந்தாவது பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

Thu, 03/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை