ராஜபக் ஷ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே தீர்மானத்தின் நோக்கம்

ஜெனீவா பிரேரணை குறித்து சபையில் அமைச்சர் தினேஷ்

புவியியல் ரீதியாக தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான சில நாடுகள் பலவீனமான நாடுகளை மனித உரிமை விவகாரங்களின் ஊடாக நசுக்குவதற்கு முற்படுவதே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையின் இறைமைக்கும், சுயாதீனத்துக்கும் எதிரானதென்பதுடன் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலையை உருவாக்குவதையும் ஜனாதிபதி கோட்டாபய  ராஜக்ஷவின் அரசாங்கத்துக்கு சிக்கல்களை ஏற்படுவதுமே இத்தீர்மானத்தின் நோக்கமாகும். அதனால் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிப்பதுடன், உள்ளகப் பொறிமுறையினூடாக நாம் விசாரணைகளை மேற்கொள்வோமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 கீழ் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

30 வருட கால யுத்தம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் முற்றாக தோற்கடிக்கப்பட்டு சிங்களம், தமிழ்,முஸ்லிம் என அனைத்தின மக்களும் ஒற்றுமையாக சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால், தனி ஈழத்தை உருவாக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்றும் அதே நோக்கத்துக்காக சர்வதேச ரீதியில் ஈடுபடுகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் ஏனைய நிறுவனங்களுடன் இலங்கை நீண்டகாலமாக உறவை பேணி வருகிறது. இறுதி யுத்தத்தின்போது பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தனர். எமது இராணுவத்தினரே அவர்களை தங்களது தோல்களில் சுமந்து பாதுகாத்தனர். இராணுவத்தினர் அத்தகைய வீரமிகு தியாகத்தை மேற்கொண்டனர். புலிகள் அந்த மக்களை வலுக்கட்டாயமாகவே வைத்திருந்தனர்.

யுத்தத்தின் பின்னர் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் சாதாரண வாழ்வுக்கு வரும் செயற்பாட்டையும் முன்னெடுத்தோம். 46/1 கீழ் தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். கருத்து சுதந்திரம் உள்ளதால் அவற்றை கூற முடியும். புலிகள் அமைப்பானது உலகில் பயங்கரமான தீவிரவாத அமைப்பாகும். எமது நாட்டின் பிரதமர், ஜனாதிபதிகளை படுகொலை செய்த அமைப்பாகும். எமது நாட்டுக்கு அப்பால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உறுப்பினர்களை படுகொலை செய்தனர். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு அதுகுறித்து பேசுவதில்லை.

மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

நீண்டகாலத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் பங்குச்சந்தை வளர்ச்சிகண்டிருந்தது. செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்தியுள்ளோம். சவால்களுக்கு மத்தியில் நாம் பயணிக்கிறோம். நாட்டுக்கு பாதகமான விடயங்கள் ஏற்படும் போது மகிழ்ச்சியடைய வேண்டாமென எதிர்க்கட்சியினருக்கு கூறுகிறேன். எமது அரசாங்கம் அனைத்து நாட்டு இராஜத்தந்திரிகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது. அனைத்து நாடுகளுடனும் நட்புடன்தான் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 03/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை